சிறப்பு செய்திகள்

கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்காதது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை வெளிநாட்டிற்கு அழைத்து செகன்று மருத்துவம் பார்க்காமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காதது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 8.4.2019 அன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.தியாகராஜன் ஆகியோரை ஆதரித்து குன்னூர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும்போது எங்கள் பிரச்சார கூட்டங்களில் கூட்டமே இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார். இன்று கடும் வெயிலினையும் பொருட்படுத்தாமல் அலைகடலென திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தினை பார்த்து அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அம்மாவின் அரசு வேளாண்மைத்துறைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 4500 ஏரிகளில் இதுரை 3000 ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது.

எஞ்சிய 1500 ஏரிகளும் விரைவில் தூர் வாரப்படும். தமிழ்நாட்டில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதெற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். நாங்கள் மக்களுக்கு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் எங்களை குறை சொல்லியே வாக்கு கேட்டு வருகிறார். தி.மு.க.வினர் அமைதியாக இருந்தாலே இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். யார் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் நல்லது செல்வார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புஞ்சைப்புளியம்பட்டியில் 1000 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை அமைக்கப்படும். 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் எந்த நேரத்தில் மின்சாரம் வரும் எந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்று தெரியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டு காலத்திற்குள்ளாக தடையில்லா மின்சராம் வழங்கி மின் வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் இரண்டரை ஆண்டு காலத்திற்குள்ளாகவே மின் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்கியது.

மின் வெட்டு இல்லாத தமிழகம் இருக்க வேண்டும் எனில் 16000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக மேலும் 6500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தொடர்ந்து விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்ததற்காக மத்திய அரசின் விருதையும் அம்மாவின் அரசு பெற்றுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி இந்த பகுதியை சார்ந்த விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 ¾ ஆண்டுகளில் திட்டம் முடிக்கப்பட்டு என்னால் துவக்கி வைக்கப்படும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேறும்போது கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஏரிகள், குளங்களில் நீர் நிரப்புவதற்கு வழிவகை செய்யப்படும். விவசாயத்திற்கு உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பாகும். அந்த கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு இறப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதையெல்லாம் தடுத்திடும் வகையிலும், புதிய மாட்டு இனங்களை கண்டறிவதற்கு ஏதுவாக ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையம் 900 ஏக்கர் பரப்பளவில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே அமைக்கப்படவுள்ளது. கோபிச்செட்டிபாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இந்த தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார்.

கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் ரூ.53 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கோபி நகராட்சி பெரிய நகராட்சியாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு ரூ.19 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்படும். கொளப்பலூர் அருகே புதிய டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 7500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சித்தோடு-மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை ரூ.320 கோடி மதிப்பில் அமைக்கப்படும். நம்பியூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

நம்பியூரில் புதிய தொழிற்பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. 6 பேரூராட்சிகளில் ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. 6 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபி சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ.1367 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலைக்கேற்ப படிப்படியாக பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதுமுள்ள 39 தொகுதிகளில் இதுவரை 33 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளேன். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் எழுச்சியுடனும் ஆரவாரத்துடனும் மிகுந்த உற்சாகத்துடன் திறண்டு வரவேற்பு அளித்தார்கள். பொதுமக்களின் எழுச்சிமிகு வரவேற்பை காணுகின்றபோது தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச முடியாத நிலையில் வீட்டுகாவலில் வைக்கப்பட்டு இருந்தார். அவரை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் உடல்நலத்துடன் இருந்து இருப்பார். ஆனால் ஸ்டாலின் தான் தலைவராக வரவேண்டும் என்பதற்காக கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்து விட்டார் என அவரது கட்சி தொண்டர்களே தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் இந்த அரசின் மீது ஊழல் குற்றம் சுமத்தி வருகிறார். இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி. இந்த நிலையில் அவர் ஊழலை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஸ்டாலின் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே தினந்தோறும் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் பேசுவதில் எதிலும் உண்மை இருக்காது. இதையெல்லாம் நாள்தோறும் நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே வாக்காள பெருமக்கள் நன்கு சிந்தித்து யார் ஆட்சிப்பொறுப்பில் இருந்தால் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்.

எனவே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம். தியாகராஜனுக்கும் புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிகாக்கப்பட்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.