தற்போதைய செய்திகள்

கரூரில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர்:-

கரூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.19.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அம்மா அவர்கள் பெண் சிசுக்கொலைகளை தடுக்கும் விதமாக தொட்டில்குழந்தை திட்டம், மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி திட்டம், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், வளரிளம் பெண்களுக்கான சத்தான உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம், என எண்ணிலடங்கா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும், அவர் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களுள் ஒன்றான ஏழை, எளிய கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு ரூ.38,500 வீதம் மொத்தம் ரூ.19.25 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தோடு இணைந்திருந்த கரூர் மாவட்டத்தை பிரித்து, தற்போது கரூரை தலைமையிடமாக கொண்டு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தை உருவாக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 65,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் அதிக அளவிலான பால் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஒரு விவசாயி என்பதால் தமிழகத்து விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து என்ற திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே செயல்படுத்தி, குடிமராமத்து நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். 1996-ம் ஆண்டிற்கு பிறகு கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால், புகளுர் வாய்க்கால், கட்டளை மேட்டுவாய்க்கால், ராஜவாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.