தற்போதைய செய்திகள்

கரூரில் 544 பயனாளிகளுக்கு ரூ.88.69 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்…

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் 544 பயனாளிகளுக்கு ரூ.88.69 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்களையும், பேட்டரியால் இயங்கும்சக்கர நாற்காலியையும், பட்டுவளர்ச்சித்துறையின் சார்பாக 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத் தொகைக்கான காசோலையை 3 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகைவழங்கும் திட்டம், தசைச் சிதைவு நோய் பாதிக்கப்பட்டவருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், தொழு நோயினால் குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களின் கீழ் 2,679 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,67 கோடி வழங்கப்பட்டுள்ளது.பள்ளி,கல்லூரிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டத்திற்குள் பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.5 லட்சம் மதிப்பில் இலவச பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய வங்கிக் கடன் மானியமாக 24 நபர்களுக்கு ரூ6.23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய திட்டமாக பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி கரூர் மாவட்டத்தில் 20 நபர்களுக்கு ரூ15 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் 2018 நிதியாண்டு முதல் ஆவின் பாலகம் வைப்பதற்கு மானியத்தொகை ரூ50,000- தமிழக அரசால் வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 152 நபர்களுக்கு ரூ6.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோரை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், பேசும் திறனற்ற மற்றும் காது கேளாதோரை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், கை,கால் குறையுடைய மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி திட்டங்களின் கீழ் 15 நபர்களுக்கு ரூ6.25 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தலா 8 கிராம் தங்கநாணயம் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் காது கேளாதோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், மன வளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி, மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம், 14-வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சியுடன் கூடிய ஆண்களுக்கான இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவூட்டு செலவீனம் ரூ.650 லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய மானியமாகவும் மற்றும் இல்லங்களில் தங்கி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உணவூட்டு செலவீனமாகவும் ரூ.53.03 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டு முதல் சிறப்பாசிரியர்களின் ஊதிய மானியம் ரூ.10,000 லிருந்து ரூ.14,000 மாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.10,59,100 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து நூறு மட்டும்) மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

2018-2019 ஆம் ஆண்டிற்கு 40 பயனாளிகளுக்கு ரூ.21,14,480 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், மூன்று சக்கரசைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, பிரைய்லி கை கடிகாரம், காது கேளாதோருக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி, கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு முட நீக்கு சாதனங்கள், ஊன்று கோல், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலி போன்ற உதவி உபகரணங்கள் 327 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ10.70லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக அரசால் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பல்லூடக பயிற்சி துவங்கப்பட்டு 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ30,000 மதிப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சிக்கு 2வது கட்டமாக 40 நபர்கள் 1.03.2019 அன்று முதல் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு இணையாக சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளும் மதிக்கப்படவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது 9 வகையான பாதிப்புகளுக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.; இப்போது 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக,  544 பயனாளிகளுக்கு ரூ.88.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்,

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், வை.நெடுஞ்செழியன், செல்வராஜ் வி.சி.கே.ஜெயராஜ், மார்க்கண்டேயன், சிவசாமி, மல்லிகா, ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.