தற்போதைய செய்திகள்

கரூர் நகராட்சியில் தட்டுபாடின்றி குடிநீர் விநியோகம் – மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி…

கரூர்:-

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் நேற்று பொதுமக்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பேசியதாவது;-

புரட்சிதலைவி அம்மா, மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடிச்சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகளை மனுக்களாகப் பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட அம்மா அவர்கள், அரசின் உதவிகளை பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார்.

அவரது பணியினை தொடர்ந்து முதலமைச்சர் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், மடிகணினி உட்பட 14 வகையான உபகரணங்கள் வழங்குதல் என எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நிலை உயர வழங்கினார். கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அசில் கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது நீர்வழிப்பாதை சரியாக இல்லாத குழாய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைத்து தட்டுப்பாடில்லாமல் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.15 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் தொடர்ச்சியாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ.13.10 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, கழிவுநீர் வாய்க்கால் இல்லாத பகுதிகள், இருந்தும் பழுதடைந்துள்ள பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு புதிய கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அம்மா ஆட்சியில் தான் வெங்கமேடு ரயில்வே மேம்பாலம், பசுபதிபாளையம் 5 சாலை இடையே அமராவதி பாலம், அமராவதி ஆற்றில் பெரியார் நகரில் தடுப்பணை, குளத்துப்பாளையம் மற்றும் பசுபதி பாளையத்திலும் பேக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் குகைவழிப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சைப்புகலூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் வாங்கல் முதல் மோகனூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல கரூர் மாவட்டம் நெரூர் திருச்சி மாவட்டம் உன்னியூர் பகுதிகளை இணைக்கும் வகையில் உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன், கரூர் வட்டாட்சியர் பிரபு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கே.ஆர்.காளியப்பன், திருவிக, என்.எஸ்.கிருஷ்ணன், செல்வராஜ், நெடுஞ்செழியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.