தற்போதைய செய்திகள்

கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் மக்களவை துணை சபாநாயகர் ஆய்வு…

கரூர்:-

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரி, பவித்திரம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, முன்னூர், தென்னிலை கிழக்கு மற்றும் மேற்கு, மெஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், துக்காட்சி, அத்திபாளையம், குப்பம், புன்னம், கோடந்தூர், கூடலூர் கிழக்கு மற்றும் மேற்கு, சின்னதாராபுரம், தொக்குப்பட்டி, இராசபுரம், புன்சைய் காளிகுறிச்சி, எலவனூர், சுடாமணி, நடந்தை, ஆரியூர், அணைப்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை நேற்று பொதுமக்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி முதலமைச்சர் அம்மா அவர்கள், மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடிச்சென்று பொதுமக்களின் குறைகள் தேவைகளை மனுக்களாகப் பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றது.

அனைத்து மாநிலங்களைக்காட்டிலும், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட அம்மா அவர்கள், அரசின் உதவிகளை பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார். அவர்கள் பணியினை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, அரை பவுன் தாலிக்கு தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், மடிக்கணினி உட்பட 14 வகையான உபகரணங்கள் வழங்குதல் என எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நிலை உயர வழங்கினார்.

கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊரகவளர்ச்சி மற்றும் பிற துறைகள் மூலம் மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 4,853 மனுக்கள் பெறப்பட்டு 4,265 மனுக்கள் மீது தீர்வுகாணப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள மனுக்களின் மீதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல், கிரிஷ்டி, பொறியாளர் மூர்த்தி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் காளியப்பன், கிருஷ்ணன், மார்கெண்டேயன், உட்பட பலர் உடன் இருந்தனர்.