சிறப்பு செய்திகள்

கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை

மேகதாதுவில் தடுப்பணை கட்ட வரைவு அறிக்கை தயார் செய்யும்படி கர்நாடக அரசுக்கு நீர்வள குழுமம் அளித்திருக்கும் அனுமதியை உடனடியாக திரும்பப் பெற ஆணையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்துடன் 6-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

எங்களின் பெருமைக்குரிய தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது காவேரி நதிநீர் பிரச்சினைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கடந்த 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 18.5.2018 அன்று வெளியானது.

அதில் காவேரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு கடந்த 1.6.2018 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவேரி நதிநீர் பிரச்சினையில், காவேரி கீழ்படுகையில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் அதை மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு திட்டம் தயாரித்து மத்திய அரசின் நீர்வள குழுமத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதனைத்தொடர்ந்து மத்திய நீர்வள குழுமமும், கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது குறித்த வரைவு அறிக்கையை தயார் செய்யும்படி அனுமதி அளித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த தடுப்பணை கட்டும் விவகாரமும், அதற்கு மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்திருப்பதும் தமிழக மக்கள் இடையேயும், டெல்டா மாவட்ட விவசாயிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த செயல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. முரணானது. இது குறித்து ஏற்கனவே நான் கடந்த 27.11.2018 அன்று தங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்த கடிதத்தில் மத்திய நீர்வள குழுமம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன்.

கர்நாடக அரசின் முயற்சியும், அதற்கு மத்திய நீர்வள குழுமம் அளித்த அனுமதியும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது காவேரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் தங்களுக்கு தெளிவாக தெரிவித்திருக்கிறேன். அதனால் கடந்த 6,12.2018 அன்று தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தும்படியும், மத்திய நீர்வள குழுமத்தின் அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அரசின் இந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்திருக்கிறேன். எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக வரைவு அறிக்கை தயார் செய்ய அனுமதி அளித்திருக்கும் மத்திய நீர்வள குழுமத்தின் அனுமதியை திரும்பப் பெற ஆணையிடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்துடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்நகலும் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.