கன்னியாகுமரி

கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டகங்கள் – டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வழங்கினார்…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகங்களை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில், 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

முதலமைச்சரால் கர்ப்பிணி தாய்மார்களுக்கான அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கும் திட்டம் சென்னையில் 04.03.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நமது மாவட்டத்தில், 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நலபெட்டகம் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நலபெட்டகம் வழங்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது. முதல் தவணை கர்ப்பிணிகள் பதிவு செய்த 12 வாரத்திற்கு பிறகு ரூ.2,000 வழங்கப்படுகிறது. 2-வது தவணை 4 மாதத்திற்கு பிறகு ரூ 2,000 வழங்கப்படுகிறது. 3-வது தவணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஃ அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் பிரசவத்திற்குப் பிறகு ரூ.4,000 வழங்கப்படுகிறது. 4-வது தவணை தடுப்பூசி 3 தவணைகள் கொடுத்த பிறகு ரூ.4,000 வழங்கப்படுகிறது. 5-வது தவணை 9 மற்றும் 12-வது மாத தடுப்பூசி வழங்கிய பிறகு ரூ.2,000 வழங்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் 3-வது மாத முடிவிலும், 4-வது மாத முடிவிலும் ரூ.2,000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு மேம்பட்ட தரமான கர்ப்பகால சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள், உணவு வழியாக கிடைக்க செய்வதை உறுதி செய்து மேம்படுத்தும் நோக்கில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தியால் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கு ஏற்ற புரோமின் இணை சத்து கிடைக்கவும், பிந்தைய கால இரும்புச்சத்து இணை உணவாக பேரீச்சம் பழமும், அதற்கு அடுத்த மாதங்களில் உணவு இணை சத்துக்களை உடலில் ஏற்கும் தன்மையை அதிகப்படுத்தும் விதமாக ஆவின் நெய்யும், இரும்புசத்து மாத்திரைகளுக்கு பதிலாக உடல் ஏற்று கொள்ளும் வகையில் சிறப்பாக கர்ப்பிணிகளுக்கு 2 முறை இணை உணவு பெட்டகம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மதுசூதனன், வட்டார மருத்துவர் ராஜ்குமார், முன்னாள் தாழக்குடி பேரூராட்சி தலைவர் ரோஹிணி ஜயப்பன், முன்னாள் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் மாடசாமி, ஜெயசந்திரன் (எ) சந்துரு, ஜெயசீலன், விக்ரமன், ஞாலம் ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.