தற்போதைய செய்திகள்

கலர் கலராய் ரீல் விடும் தி.மு.க. தேர்தலோடு காணாமல் போகும் – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு…

சென்னை:-

கலர், கலராய் ரீல் விடும் தி.மு.க. வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு காணாமல் போகும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் ேபாட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் சிங்கம்புனரியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வாழ வைக்கவே பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை தொடங்கினார். 1967-ம் ஆண்டு மக்கள் பேராதரவை பெற்று ஆட்சியையும் கைப்பற்றினார். உலக அரசியல் வரலாற்றில் தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கு சிறப்பான இடம் கிடைத்தது. அண்ணாவின் மறைவிற்கு பின் அக்கட்சிக்கு தலைமையேற்ற மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மக்கள் நலத்தை புறக்கணித்து விட்டு தனது சுயநலத்திற்காக தி.மு.க என்ற கட்சியை பயன்படுத்தி கொண்டார். ஊழலின் உறைவிடமாக மாறிப்போன கருணாநிதியின் தி.மு.க.வில் நல்லவர்கள் இருக்க விரும்பவில்லை.

புரட்சித்தலைவர் தலைமையில் புதிய இயக்கம் மலர்ந்தது. அதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அறிஞர் அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்றுகிற ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. தி.மு.க என்றாலே ஊழல் கட்சி என்றும், தி.மு.க.வினர் என்றாலே ஊழல் பெருச்சாளிகள் என்றும் மக்களே சொல்லுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது. தி.மு.க.வினரின் இந்த செயலை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள். தண்டிக்கவும் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல், அதையடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 சட்டசபை தேர்தல் என அனைத்திலும் மக்கள் தி.மு.க.வினரை அடியோடு புறக்கணித்ததே ஒரு பாடமாகும்.

“ஆற்றலுடையவர்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்” என்பதைப் போல, தங்கள் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை, தமிழக மக்களின் நலன்களுக்காக எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி, எத்தனையோ, இன்னல்கள், இடையூறுகள், சோதனைகள் வந்த போதிலும், கடும் எதிர்ப்புகளையும் ஆற்றலுடன் எதிர்கொண்டு, மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள், தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த பிறகும், தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தான்.
தமிழக மக்களுக்காக ஒவ்வொரு வினாடியையும் மக்கள் நலத்திற்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிடுகிற, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த, மகத்தானதொரு கழக அரசின் செயல்பாடுகளில் கறையை பூசவே தி.மு.க.வினர் வெறி கொண்டு அலைகிறார்கள்.

“முக்கடல் சூழ்ந்த பாரதத்தின், மூன்றாம் பெரும் இயக்கமாக, ராணுவக் கட்டுக்கோப்புடன் கட்டி காக்கப்பட்டு, கண்ணின் இமையாக போற்றப்பட்டு வரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் கடைசி தொண்டனாலும், கட்சிக்கு தலைவனாக முடியும் என்பதற்கு அ.இ.அ.தி.மு.க.வே சாட்சி என்றால், மறைந்த தலைவர் மு.கருணாநிதி குடும்பத்தைத் தவிர, வேறு யாராலும் தி.மு.க தலைவர் பதவியை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதற்கு சாட்சியாக தி.மு.க விளங்குகிறது.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாமல் பின் தங்கச் செய்து, வறுமையும், பசியும், பட்டினியும் வளரச் செய்து மக்களை எல்லாம் மடையர்களாக்கியவர்கள் இன்று தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் பேசுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவார்களாம்.

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஏழை விவசாயிகளுக்கு, 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என அறிவித்தார்கள். அது அறிவிப்போடு காணாமல் போய் விட்டது. இதே போன்று பொய்யான தேர்தல் அறிக்கையை அறிவித்து மக்களை திசை திருப்புவதுதான் தி.மு.க.வின் வாடிக்கை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றியதோடு, அறிவிக்கப்படாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.  அதே போன்று 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட, தேர்தல் அறிக்கைகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை ஒரு மாபெரும் தலைவராக நினைத்துக் கொண்டு, கலர் கலராய் சட்டை அணிந்து கொண்டு, டிராக்டரில் வலம் வருவது, டீ கடையில் டீ குடிப்பது, செல்பி எடுப்பது என பல்வேறு செயல்களின் மூலமாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். இவர்கள் ஆட்சி செய்த காலங்களில் எல்லாம் மக்களை மறந்து, எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கலர் கலராய் ரீல் விட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க இந்த தேர்தலோடு காணாமல் போகும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.