தற்போதைய செய்திகள்

கல்லூரிகளை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம்,பாரிவேந்தர் வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு…

திருச்சி

பாரிவேந்தர் பணம் கொடுத்து மக்களை வாங்க முடியாது கல்லூரிகளை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம் மக்களை விலைக்கு வாங்க முடியாது தா.ம.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி புறநகர் மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டுவரும் திட்டங்களை ஆதரிக்காமல், அத்திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவிற்கு காங்கிரஸ் எதிர்த்து வருகிறது., இப்படி மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் – தி.மு.க. மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. தி.மு.க. கூட்டணி மக்கள் விரோதக்கூட்டணி. ஆனால், அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணி மக்கள் நலக்கூட்டணி.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி மலரவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். பெரம்பலூர் தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி அமைச்சராக இருந்தவர். இந்த பகுதி மக்களுக்கு அறிமுகமானவர். நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவர் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்கட்சி வேட்பாளர் பணம் படைத்தவர். தமிழகம் மட்டும் அல்ல பிற மாநிலங்களில் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றார். ஆகையால் பணத்தால் கட்டிடங்கள் வாங்கலாம், கல்லூரிகள் வாங்கலாம்.

ஆனால், பணத்தை கொடுத்து மக்களிடம் வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது. எங்களது வேட்பாளர் என்.ஆர்.சிவபதி உதவும் நல்ல மனம் படைத்தவர். மக்களின் மனத்திற்கேற்றவாறு தேவைகளை அறிந்து நாடாளுமன்றத்தில் நல்ல பல திட்டங்களை எடுத்து கூறி போராடி பெற்றுத் தருவார். எனவே, தொடர்ந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் தொடர வேண்டும் எனில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய செய்யவேண்டுகிறேன்.

இவ்வாறு த.மா.கா .தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.