திருவண்ணாமலை

கல்வியில் புரட்சி செய்து வாழ்வில் முன்னேறுங்கள் – மாணவர்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுரை…

திருவண்ணாமலை

கல்வியில் புரட்சி செய்து வாழ்வில் முன்னேறுங்கள் என்று மாணவர்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் உள்ள 35 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் 12 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 5995 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.

பின்னர் விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது: –

புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டம் மடிகணினி வழங்கும் திட்டம். இந்த திட்டம் அறிவித்த பின்னர் அரசுபள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் படிப்பு திறமை என எல்லாமும் முன்னேறி விட்டது. மேலும் இன்று செய்யாறு கல்வி மாவட்ட அளவில் உள்ள 35 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவர்கள் 4471 பேருக்கும், 11ம் வகுப்பு மாணவர்கள் 1524 பேருக்கும் என மொத்தம் 5995 பள்ளி மாணவர்களுக்கு ரூ7,35,76,635 மதிப்பிலான மடிகணினிகள் வழங்கப்படுகிறது.

கடந்த 2017-18ம் கல்வியாண்டு படித்த மாணவர்களுக்கான மடிக்கணினி ஒருமாதத்திற்குள் வழங்கப்படும். 2019-20ம் ஆண்டில் கல்விக்காக சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கழக அரசு. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப்புத்தகம், பாடபுத்தகம் எடுத்து செல்லும் பை, ஜாமெண்டிரிபாக்ஸ், கலர் பென்சில்கள், 4செட் விலையில்லா சீருடைகள் என படிக்க தேவையான அனைத்தையும் விலையில்லாமல் வழங்கி வருகிறது.

பள்ளிமாணவர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடநூல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் சந்திக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

பின்னர் செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களும் வசதி படைத்த மாணவர்கள் படிக்கும் கல்வியை படிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் புரட்சித்தலைவி அம்மா விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

இத்திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வியில் பல புரட்சிகளை செய்து வாழ்வில் முன்னேறியுள்ளனர். ஆகையால் இன்று மடிகணினி பெறும் மாணவர்கள் சிறப்பாக கல்வியை பயின்று வாழ்வில் முன்னேறுங்கள். இது அம்மாவின் அரசு. உங்கள் அரசாங்கம் உங்கள் தேவைகளை அறிந்து சேவை செய்யும் என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட இணைசெயலாளர் விமலா மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ வே.குணசீலன், ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், செய்யாறு பகுதி நிர்வாகிகள் ரங்கநாதன், ஜனார்த்தனன், வெங்கடேசன், லோகநாதன், ராஜமாணிக்கம், பூக்கடை கோபால், தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.