தற்போதைய செய்திகள்

கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடக்கம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…

ஈரோடு:-

கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் 933 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 191 மாணவர்களுக்கும், நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 215 மாணவிகளுக்கும், மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 191 மாணவ, மாணவிகளுக்கும், சாவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 83 மாணவ, மாணவிகளுக்கும், வேமாண்டபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 65 மாணவ, மாணவிகளுக்கும், பட்டிமணியகாரன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 86 மாணவ, மாணவியர்களுக்கும், காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 102 மாணவ, மாணவிகளுக்கும் என 933 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் மாற்றியமைக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது. கடந்த கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வி ஆண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 7,000 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வகுப்பறைகள் முழுவதும் கணினி மயமாக்கப்படவுள்ளது. தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் மூலம், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து போட்டித்தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு என சேர்த்து மொத்தம், 15,40,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2100 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் கல்விக்கென புதிய தொலைக்காட்சி சேவை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் இன்னும் சில தினங்களில் கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்படவுள்ளது. மாணவர்கள், தேசபக்தியோடு வாழ்வதற்கும், பெற்றோர்களை நேசிப்பதற்கும், கல்வியோடு ஒழுக்கத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கும், வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இம்மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கக்கூடாது என்ற முறையிலும், உணவு பழக்க வழக்கங்களை எவ்வாறு கடைபிடிப்பது மற்றும் மாணவ, மாணவிகள் பொறாமை இல்லாமல் சகோதர உணர்வுடன் எப்படி இருப்பது உள்ளிட்ட 11 விதமான பயிற்சிகள் அளிக்க மெக்சிகோ நாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான கழிப்பிடவசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 28.02.2019 அன்று ரூ.1,538 கோடி திட்ட மதிப்பீட்டில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் நோக்கமானது மழைக்காலங்களில் பவானி ஆற்றில் வரும் உபரி நீரைக்கொண்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 74 குளங்கள் மற்றும் 971 குட்டைகளுக்கு நீரேற்றம் மூலம்; நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாகும்.

இத்திட்டத்திற்காக 5 நீரேற்று நிலையங்கள் பவானி, நசியனூர், பெருந்துறை, நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி கிராமத்தில் உள்ள வரப்பாளையம் மற்றும் அன்னூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது. 4-வது நீரேற்று நிலையமான நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி கிராமம், வரப்பாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, மண்பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றியக் கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், மாவட்ட ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கந்தசாமி, பவானிசாகர் ஒன்றியக் கழக செயலாளர் வி.ஏ.பழனிசாமி கே.என்.கந்தசாமி, நம்பியூர் பேரூராட்சி செயலாளர் கருப்பண்ண கவுண்டர், எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, ஆவின் இயக்குநர் ஏ.பி.ஈஸ்வரமூர்த்தி நம்பிமணி, எம்.எம்.எம்.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.