தற்போதைய செய்திகள்

கழகக் கூட்டணிக்கு மகுடம் சூட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை

கழகக் கூட்டணிக்கு மகுடம் சூட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சி கூட்டணியின் சின்னங்களை பாருங்கள். இலை, பழம், மலர். அதற்கு பின்பு மத்தளம். அவர்களும் வந்து விடுவார்கள். இது மங்களகரமான இயற்கையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியில் கொதிக்கும் சூரியன், பம்பரம், வெட்டப்பட்ட கை, சுத்தி அரிவாள் உள்ளன. இந்த சின்னங்கள் எல்லாம் சேர்ந்தால் கலவரம் தான். எங்களுடைய மெகா கூட்டணியை பொறுத்தவரை மகத்தான வெற்றிபெறும். இந்த கூட்டணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.

மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் எப்படி நாடாளுமன்றத்தில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக கழகத்தை உருவாக்கினார். அதுபோல தனிப்பெரும் கட்சியாக கழகம் மகத்தான வெற்றியை பெறும். மக்கள் கழக கூட்டணிக்கு மகுடம் சூட்ட தயாராகி விட்டார்கள்.

தே.மு.தி.க. குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார்கள். பேச்சுவார்த்தை குறித்தும் முறையாக அவர்கள் தான் அறிவிப்பார்கள். கழக கூட்டணி தற்போது ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.