சிறப்பு செய்திகள்

கழகக் கூட்டணியில் த.மா.கா. இணைந்தது : தொகுதி பங்கீடுகள் நிறைவு…

சென்னை:-

வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கழக கூட்டணியில் த.மா.கா.வும் இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில்  கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கு பெற்றனர்.

இத்துடன் கழக கூட்டணியில் தொகுதி பங்கீடு பெற்றது. கழகம் 20 நாடாளுமன்ற தொகுதிகளும், கூட்டணி கட்சிகளான பா.ம.க. 7 தொகுதிகளும், பா.ஜ.க. 5 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும், த.மா.கா. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளும் கழகத்துக்கு ஆதரவு அளிப்பதென உறுதி அளித்துள்ளன.

புதுவை உள்பட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றும், கழக கூட்டணியின் வெற்றிக்கு முழு வீச்சுடன் த.மா.கா. பாடுபடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.