சேலம்

கழகக் கூட்டணியைக் கண்டு ஸ்டாலினுக்கு பயம் – சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் பேச்சு…

சேலம்:-

அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்று சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் வீரகனூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். வீரகனூர் பேரூர் செயலாளர் ராஜேந்திரன் நாட்டார் வரவேற்றார். கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து முன்னிலை வகித்தார்.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் பேசியதாவது:-

அம்மாவின் அரசு மக்களின் அரசு, நமது முதல்வர் மக்களின் முதல்வர். மக்கள் நலன் ஒன்றையே தன்னலம் என வாழ்ந்து மறைந்தார். புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளில் அவர் எடுத்த சபதத்தை, அவர் தமிழக மக்கள் நலன் மீது கொண்டிருந்த பாசத்தையும் மக்கள் அறிவார்கள். அவர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு அம்மா விட்டுச்சென்ற பணிகளையும், கட்சிப் பணியையும், ஆட்சிப் பணியையும் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்.

நாள்தோறும் திட்டங்களை வாரி வழங்கி வருகிறார். இந்த திட்டங்களை கண்டு பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஆதரவோடு முதல்வர் தவிடுபொடி ஆக்கி விடுவார் தேர்தலில் நாம் வகுத்துள்ள கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பயந்து போய் உளறுகிறார், பிதற்றுகிறார். ஏன் இந்த பிதற்றல், ஏன் இந்த உளறல். மக்களை சந்திக்க தைரியம் இல்லையா, மக்கள் என்றும் அ.தி.மு.க.வின் ஆட்சி தான் வர வேண்டும் என முடிவு செய்து உள்ளனர். இந்த தேர்தலோடு தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும், அடியோடு அழிந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு வந்துதான் இந்த பிதற்றல் பயம்.

அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு விதமான திட்டங்கள் மூலம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் தேர்தல் பணி துவங்கி விட்டார். வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க சொன்னார். அந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொரு முகவர்களும் பத்து வாக்காளர்களை சந்தித்து அதன்மூலம் நாம் வாக்குகளை பெற்றால் ஒவ்வொரு தொகுதியும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறும். இந்த கட்டமைப்பு கழகத்தில் மட்டுமே உள்ளது.

கழகத் தொண்டர்களின் ஒற்றுமை, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை, தமிழக மக்களுக்கு எப்போதும் நல்லாட்சி கொடுத்து வரும் முதல்வரின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் தான் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அப்படி இருக்கும் பொழுது நாடாளுமன்ற தேர்தல் இல்லை. இனி எந்த தேர்தல் வந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க தான் வெற்றிபெறும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் ஜெகதீசன், முன்னாள் தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோவன், வீரகனூர் ஜே.சி.பி பாலு, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.