தற்போதைய செய்திகள்

கழகக் கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் – தொண்டர்களுக்கு அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள்…

காஞ்சிபுரம்:-

கழகக் கூட்டணி வெற்றி பெற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் நாவலூர் முத்து ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில், மரகதம் குமரவேல் எம்.பி. பேசுகையில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பென்சில், நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றார்.

மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசுகையில், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு கிளைகளிலும் கழக தொண்டர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களில் வர்ணம் பூசி கொடியேற்ற வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும், ஒவ்வோரு கிராமங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒளிபரப்ப வேண்டும் என்றார்.

அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் 100 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றியடைய வேண்டும். ஒவ்வொருவரும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். கழகக் கூட்டணி திருவிழா கூட்டணி. இலை, பூ, பழம் உள்ள கூட்டணி. தி.மு.க. கூட்டணி சுட்டெரிக்கும் கூட்டணி. அதில் சூரியன், வெட்டுப்பட்ட கை, அரிவாள் சுத்தியல், பம்பரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றுக்குகூட ஒற்றுமையில்லை.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். வருகின்ற நாடளுமன்றத் தேர்தலில் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற அனைவரும் அயராது பாடுபட வேண்டும். அம்மா நம்மை நல்ல முறையில் வளர்த்துள்ளார். ஆதலால் வருகின்ற 23, 24 தேதிகளில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் முகவரி மாறுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

முன்னதாக திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.குமரவேல் வரவேற்றார். முடிவில் மாம்பாக்கம் ஊராட்சி செயலாளர் சி.ராஜி நன்றி கூறினார்.