தற்போதைய செய்திகள்

கழகத்தின் கூட்டணியை விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி…

சென்னை:-

அ.தி.மு.க- பா.ம.க கூட்டணியை குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த புத்தாக்க பயிற்சி முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ெச.ராஜூ தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அம்மாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார், அம்மாவின் ஆட்சி கடந்த பிப்ரவரி 14ம்-தேதியோடு இரண்டாண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் ஆட்சி, அம்மாவின் திட்டங்களை மட்டுமில்லாமல் அதையும் தாண்டி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

அம்மா ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும், அந்த பணியை மக்கள் தொடர்பு அதிகாரிகள் சிறப்பான முறையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் துறைகளின் சாதனைகளை எல்.டி.இ. மூலம் 32 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் திரையிட்டு காண்பிக்க வேண்டும். குறும்படங்கள், வீடியோக்கள் மூலம் அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை மக்களிடையே மக்கள் தொடர்பு அதிகாரிகள் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மக்கள் தொடர்புஅதிகாரிகளுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாம் இன்று தொடங்கி இருக்கிறது.நாளை ( இன்று) உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறது.

திமுக கூட்டணி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் கழகம் அமைத்த கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படுகிறார், விமர்சிக்கிறார். அவர் அரசியலில் பக்குவப்படவில்லை. கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் அவசரப்பட்டு முந்திரிக்கொட்டைத்தனமாக ராகுல்காந்தி தான் பிரதமர் என்று அறிவித்தார். பின்னர் கொல்கத்தா மாநாட்டில் சென்று கலந்து கொண்டார், அங்கு யார் பிரதமர் என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தலைவர்கள் சொல்கிறார்கள் அந்த மாநாட்டிலும் சென்று கலந்து கொள்கிறார்.

மு,க.ஸ்டாலினின் நிலையில் தெளிவில்லை, திமுக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதிமுக கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டிய தேவை அவருக்கு இல்லை, திமுக கூட்டணியி்ல் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ கோபித்துக் கொண்டு போனார். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரை இழுத்து பிடித்து வந்தார்கள். அதை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை. அப்படியானால் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது கனிமொழி மீதும் ஆ.ராசா மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கருணாநிதி காங்கிரசுடன் ஏற்பட்ட கூட்டணியை கூடா நட்பு கேடாய் முடியும் என்று தெரிவித்தார்.

எனவே எங்களை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை. ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், பண்ருட்டியார் போன்றவர்கள் இந்த கட்சியை விட்டு பிரிந்தவர்கள், மீண்டும் இணைந்தார்கள் தனித்து செயல்பட்டதாக வரலாறு இல்லை. 98ஆம் ஆண்டு பாஜகவுடன் அம்மா கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி வெற்றி பெற்றது வாஜ்பாய் பிரதமரானார், அம்மா அமைத்த கூட்டணி தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் ஏற்றுக் கொண்ட கூட்டணி.

மக்கள் நலக்கூட்டணி, மக்கள் விரும்பும் கூட்டணி இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும், 40 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். நாற்பதுக்கு நாற்பது என்பது தான் எங்கள் இலக்கு அம்மா அவர்கள் தன்னந்தனியாக போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றியை தேடித்தந்தார். 40க்கு நாற்பதையும் வென்றால் தான் அம்மாவின் வெற்றியை காத்ததாக பொருள். அதில் ஒன்றை இழந்தாலும் அவருடைய வெற்றியை நாங்கள் காக்கவில்லை என்பது தான் பொருள். நாற்பதுதொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதில் வெற்றி பெறுவது நிச்சயம்.கூட்டணி என்பது தேர்தல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதாகும்.

வன்னியர் சமூகத்தின் தலைவர் ராமசாமி படையாச்சியாரின் சிலை சட்டமன்றத்தில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ராமசாமி படையாச்சியின் மணிமண்டபம் திறந்ததோடு அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார் வன்னியர் குலச் சொத்துக்களை பாதுகாக்க சட்டமும் கொண்டு வந்தார். எனவே பா.ம.க.வினர் அதை ஏற்று கூட்டணிக்கு வந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா. மட்டுமல்ல. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் வரும், தி.மு.க.வில் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை. பல மாதங்களாக கூட்டணி அமைத்ததாக சொன்ன திமுக இன்னமும் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை, ஆனால் முதலில் கூட்டணி குறித்து இறுதி செய்தது அ.தி.மு.க தான். விரும்பி வந்தவர்களை கூட்டணியில் சேர்த்தோம், அம்மாவின் விருப்பத்தை போல மகத்தான கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.