சிறப்பு செய்திகள்

கழகத்தின் தலைமையிலான கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் – சேலம் வரவேற்பில் முதலமைச்சர் அறிவிப்பு…

சேலம்:-

கழகத்தின் தலைமையிலான கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று சேலம் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சேலம் வருகை தந்தபோது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பா.ம.க. நிர்வாகிகள் பலர் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து முழக்கமிட்டு வரவேற்றனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் தேர்தல் வெற்றி வியூகம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். வரவேற்பின்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தமிழகத்தின் நலன் கருதி தான் எனவும், இக்கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.கழகம் புரட்சித்தலைவி அம்மா அ வர்களின் வழியில் நெறி பிறழாது செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாம் நம்முடைய கொள்கைக்கு மாறாக எந்த பாதையிலும் செல்லவில்லை.

அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த கொள்கை வழியில் தான் சென்று கொண்டிருக்கிறோம். நமது கூட்டணி நாட்டின் நலன் கருதி அமைக்கப்பட்ட ஒரு வெற்றி கூட்டணி. கட்சிகளுக்கென தனித்தனி கொள்கைகள் இருக்கலாம். ஒரு கட்சியின் கொள்கை மற்றொரு கட்சிக்கு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒத்த கருத்துடைய நாட்டின் நன்மைக்கு எந்த கட்சியால் நலன் கிடைக்கும் என்பதால் தான் நமது கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.