தற்போதைய செய்திகள்

கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் ஆதரவு…

நாமக்கல்:-

கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவும் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்த தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த முட்டை கோழி பண்ணையாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் கழக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நாமக்கல் நகரில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் தலைவர் முத்துசாமி துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், நிர்வாகிகள் முரளி, சீனிவாசன், சரவணன் உள்ளிட்டோர் அமைச்சர் பி.தங்கமணியை நேரில் சந்தித்து கோழிப்பண்ணையாளர்களின் ஆதரவு அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்றும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பன் வெற்றிக்காக அனைவரும் பாடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழகத்தில் கோழித்தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கோழித்தீவனம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்தின் விலை உயர்ந்து வருவதாலும், கோழிப்பண்ணையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மக்காச்சோளத்தின் விலைஉயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் இதற்காக உதவி செய்து மத்திய அரசின் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் எடையுள்ள மக்காச்சோளத்தை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி பெற்றுத் தந்துள்ளனர்.

மேலும், நான்கு லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி செய்து கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்க நடவழக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மக்காச்சோளம் தட்டுப்பாடு நீங்கி விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்து வரும் தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் அ.இ.அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்வின் போது நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் உடனிருந்தார்.