தற்போதைய செய்திகள்

கழகத்தின் தேர்தல் வியூகத்தால் துரோகிகள் காணாமல் போவார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

மதுரை:-

கழகத்தின் புதிய தேர்தல் வியூகத்தால் துரோக கூட்டம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரது தலைமையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில் ஒரே நாளில் 70 ஊராட்சிகளில் 85 இடங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து கழக தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுவாக மரத்தில் இலைகள் பூக்கள், காய்கள், கனிகள் எல்லாம் தெரியும், ஆனால் அதன் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் மரத்திற்கே பலமாகும். அந்த வேர் தான் தொண்டர்களாகிய நீங்கள். அதனால் தான் புரட்சித்தலைவர் தொண்டர்களை எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று கூறுவார்.

நடைபெறும் தேர்தலில் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, அழிக்க நினைப்பவன் அழிந்து போவான் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடம் இருந்து சென்ற சுயேட்சை வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், இரட்டை இலையின் மூலம் பதவி சுகம் அனுபவித்து வாழ்வை வளமாக்கி கொண்டவர். அந்த இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டும் என்று ஊர், ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ேதர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். கழகத்தின் தேர்தல் வியூகத்தால் எதிரி, துரோகிகள் காணாமல் போவார்கள்.

அதே போல் காங்கிரஸ் சார்பில் ஈரோட்டை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூரில் டெபாசிட் இழந்தார். அது மட்டுமல்லாது அவர் மத்திய அமைச்சராக இருந்த போது இப்பகுதியிலுள்ள முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக ஏதாவது குரல் கொடுத்தாரா?

தமிழகத்தில் அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் நாம் உருவாக்கியுள்ளோம், பொங்கல் பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்கியுள்ளோம்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். ஆனால் அதை மக்களுக்கு வழங்க விடாமல் ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளார். தேர்தல் முடிந்த பின் நிச்சயம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். இது போன்ற சாதனை திட்டங்களை பூத் கமிட்டி நிர்வாகிகளும், கழக தோழமை கட்சி நிர்வாகிகளும் மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சோழவந்தான் தொகுதி மட்டும் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுத் தந்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். தேனி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் பி.ரவீந்திநாத்குமார், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வகையில் பதவி பெறுவார். அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு விரைவாக வந்து சேரும். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. எனவே கழக தொண்டர்கள் இரவு, பகல் பாராது களப்பணி ஆற்றி வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன்,பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், குமார், அழகுராஜா, கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட கழக துணை செயலாளர் பஞ்சம்மாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மற்றும் ராஜேஷ் கண்ணா, காளிதாஸ், சி.பி.ஆர்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.