தற்போதைய செய்திகள்

கழகத்தின் தேர்தல் வியூகத்தால் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முழக்கம்…

மதுரை

கழகத்தின் தேர்தல் வியூகத்தால் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து மேலக்குயில்குடி, கீழகுயில்குடி, வடிவேல்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

வருகின்ற மே 19-ந்தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிகமான வாக்குகளை நாம் பெற்றுத் தர வேண்டும். ஏ.கே.போஸ் மறைந்து விட்டாலும் தொடர்ந்து இத்தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது.

தேர்தல் களத்தில் நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக மக்களை குழப்பும் விதமாக பொய்யான பிரச்சாரத்தை பரப்புவார்கள். அதையெல்லாம் பூத் கமிட்டி நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். குறிப்பாக கழக அரசின் சாதனை திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை , தோப்பூரில் அமைய உள்ள துணைக்கோள் நகர திட்டம் போன்ற சாதனை திட்டங்களை வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களிடமும் எடுத்துக் கூற வேண்டும். இதே தி.மு.க. மத்தியில் 17 வருடம் ஆட்சியில் அங்கம் வகித்தபோது எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

காவேரி, முல்லை பெரியாறு போன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தமிழகத்துக்கு துரோகம் தான் செய்தார்கள். தற்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பிரியாணி கடை ஊழியர்களை தாக்குவது, அழகு நிலையத்தில் புகுந்து பெண்களை தாக்குவது போன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க.வின் ரவுடியிசத்தையும் மக்களிடம் எடுத்து கூறுங்கள்.

கழகத்தின் தேர்தல் வியூகத்தால் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். நடைபெறும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் வகுத்து கொடுத்துள்ள வியூகத்தின்படி நாம் கழக பணியாற்றி ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி பெற செய்வோம். அந்த வெற்றிக்கனியை அம்மாவின் பொற் பாதங்களில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.