தற்போதைய செய்திகள்

கழகத்தின் மெகா கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விட்டது – அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு…

கடலூர்:-

கழகத்தின் மெகா கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் தெற்கு ஒன்றியக்கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் பாதிரிகுப்பத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராம.பழனிசாமி தலைமை தாங்கினார்.

ஊராட்சி கழக செயலாளர் வி.குப்புசாமி, ஒன்றியக் கழக துணைச் செயலாளர்கள் ரவி, ராதிகா ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக அவைத்தலைவர் எம்.சிங்காரவேல் வரவேற்புரை ஆற்றினார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், தலைமை கழக பேச்சாளர் இடிமுரசு ரா.ரவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

புரட்சித் தலைவரால் நிறுவப்பட்ட மாபெரும் இயக்கத்தை 48 ஆண்டுகளில் 28 ஆண்டு காலம் ஆட்சி பீடத்தில் அமர்த்திய பெருமை அம்மாவுக்கு உண்டு. எம்ஜிஆருக்கு பிறகு ஆண்ட கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமை, இந்திய துணைக் கண்டத்தில் கழகத்துக்கு 37 இடம் பெற்றுத் தந்து மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை உயர்த்தியது போன்றவை அம்மாவின் மணி மகுடத்தில் வைர கற்கள். அம்மா நடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. நெருப்பாற்றில் நீந்தி வந்தவர். 1989-ம் ஆண்டு சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டு சட்ட சபைக்குள் நுழைந்தால் மீண்டும் முதலமைச்சராகத்தான் நான் வருவேன் என்று சபதம் ஏற்று 1991-ம் ஆண்டு முதலமைச்சராக சட்டசபையில் நுழைந்த பெருமைக்கு சொந்தக்காரர்.

2019-ம் ஆண்டு பிறக்கும்போதே கழகத்திற்கு வெற்றி ஆண்டாக பிறந்துள்ளது. பிளாஸ்டிக் தடை என்ற வரலாற்று சாதனையுடன் தொடங்கிய இந்த ஆண்டில் குப்பையில்லாத, மாசில்லா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு திகழப்போகிறது. மேலும் இந்த ஆண்டில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தந்து அனைத்து தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர்கள் முதலமைச்சரும் துணை முதல்-அமைச்சரும்.

2019 -ல் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை நமக்கு தேடித் தந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இந்த மாநாட்டை நடத்தி மூன்று லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீட்டை பெற்றுள்ளோம். ஒரு லட்சம் பேருக்கு மேல் இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் இது கழக அரசிற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். இப்போது விவசாயிகள் தொழிலாளிகள் என 60 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் வழங்கிய பெருமைக்கு சொந்தக்கார கட்சி நமது கழக ஆட்சி.

அம்மா வழியில் நடக்கும் முதல்வராக நமது முதல்வர் உள்ளார். எனக்கு பின்னும் இந்த அரசு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்று அம்மா சட்டமன்றத்தில் பேசியதற்கு ஏற்ப தற்போது இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இரட்டை இலை தற்போது நமக்கு கிடைத்துள்ளது. ஆட்சியில் இல்லாத ஸ்டாலின் கிராமசபை கூட்டங்கள் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

ஆட்சியில் இல்லாத ஒருவர் கிராமசபை கூட்டம் நடத்தி என்ன செய்ய முடியும். கழகம், பாமக என்ற வலுவான கூட்டணி வந்த உடன் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விட்டது. கண்டபடி உளறிக்கொண்டே இருக்கிறார். ஒரு மாதம் இரண்டு மாதம் மூன்று அமாவாசை என்று கழக ஆட்சிக்கு நாள் குறித்தவர்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட ஆட்சியை கண்டு மலைத்து நிற்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளையும் தமிழக மக்களுக்கு செய்து விட்டோம். 8 கிராம் தங்கம், திருமண நிதி உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பேறுகால தொகை ரூ.18 ஆயிரம் என பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அரசாக இந்த அரசு உள்ளது. பெண்களுக்கென விலையில்லா ஆடுகள், விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் என கொடுத்த இந்த அரசு தற்போது விலையில்லா கோழிக்குஞ்சுகளை கிராமப்புற மக்களுக்கு வழங்குகின்றது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மேம்படும்.

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகம், காலணி, ஜாமென்ட்ரி பாக்ஸ் எனஅனைத்தையும் விலையின்றி வழங்கி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த கூட்டத்தில் கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜி.ஜே.குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் காசிநாதன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன், மாவட்ட கவுன்சிலர் காடாம்புலியூர் தேவநாதன், பண்ருட்டி முன்னாள் தொகுதி கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், கடலூர் நகர அவைத்தலைவர் ஆர்.ராமச்சந்திரன், பொருளாளர் தனசேகரன், நகர துணை செயலாளர் கந்தன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, பி.கே.வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வம், ஏ.கே.எஸ்.சேகர்,அன்பு, பிருந்தாசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதிரிக்குப்பம் கிளை கழக செயலாளர் முருகையன் நன்றியுரை ஆற்றினார்.