திருச்சி

கழகத்தின் மெகா கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது – பெரம்பலூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேச்சு…

திருச்சி:-

கழகத்தின் மெகா கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது என்று பெரம்பலூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி அறிமுக கூட்டம் திருச்சி புறநகர் மாவட்டம், முசிறியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புறநகர் மாவட்டக் கழக செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி., தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, பூனாட்சி, மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் எம்.தங்கவேல், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மனோகராஜன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவசுப்ரமணியன், பா.ம.க மாவட்ட செயலாளர் பிரின்ஸ், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார், த.மா.கா மாவட்ட தலைவர் ரவீந்திரன், புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் குணா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வைரி.மனோகர் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது:-

இந்தியா வல்லரசாக மாறவேண்டும். அதற்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அண்டை நாடுகளின் அடாவடிகளை அடக்கியாள ஒரு திறமையான, துணிச்சலான பிரதமர் வேண்டும். அப்படி ஒரு திறமையான நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் நரேந்திர மோடியே மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டும். அதற்கு நீங்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்ற வகையில் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நல்லாட்சி தொடர விரைவில் நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலுக்கும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கும் இத்தேர்தல் அச்சாணியாகவும், முன்மாதிரியாகவும் அமையும்.
இந்த மேடையிலே வீற்றிருக்கும் நம்முடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இனி நம்மோடு தொடர்ந்து இருப்பவர்கள். ஆகவே, இனி எந்த கொம்பனாலும் இந்த கூட்டணியை முறியடிக்கவோ, வெற்றிகொள்ளவோ முடியாது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னது போல ‘எனக்கு பின்னாலும் கழகம் தொடர்ந்து 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்’. அதுபோலத்தான் நமது மெகா கூட்டணி அமைந்திருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்தார்களா? இல்லை. அதுபோல்தான், இப்போது மு.க.ஸ்டாலினும், தி.மு.கவினரும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றனர். அவை எல்லாம் இரண்டு ஏக்கர் நிலம்போலத்தான் இருக்கும். எல்லாம் மாயை. அந்த மாயைகளை நாம் முறியடிக்க வேண்டும்.

நமக்கு எதிராக எதிரணியில் நிற்கும் வேட்பாளர் ஒரு கல்வி வியாபாரி. கல்வி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்து சிறைக்கு சென்றவர். அவரை சாமானியர்கள் சென்று பார்க்க இயலாது. அவர் ஏற்கனவே இந்த தொகுதியிலே நின்று தோற்றுப் போனவர். நான் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். அமைச்சராக இருந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித்தலைவியின் தலைமையின்கீழ் தொடர்ந்து 30 ஆண்டு காலம் தொண்டனாக இருக்கிறேன்.

நான் வெற்றிபெற்றால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன், அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன். குறிப்பாக பெரம்பலூர் மக்களின் நீண்டகால கனவு திட்டமான ரயில் போக்குவரத்து வசதியை நிறைவேற்றும் வகையில் லால்குடியில் இருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக தொட்டியம் வரை ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

முசிறியில் வாழை பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைக்கவும், காவேரியாற்றில் கொரம்பு அமைக்கவும், மணமேடு பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டவும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன். நெ.1 டோல்கேட்டில் ஒரு மேம்பாலம் அமைக்க பாடுபடுவேன். மேலும், டோல்கேட்-நாமக்கல் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பாடுபடுவேன். இளைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். எனவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பேசினார்.