தற்போதைய செய்திகள்

கழகத்தில் சேர்ந்தால் ஹீரோ தி.மு.க.வில் சேர்ந்தால் ஜீரோ – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி……

சென்னை:-

கழகத்தில் சேர்ந்தால் ஹீரோ, தி.மு.க.வில் சேர்ந்தால் ஜீரோ என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடப்பது வழக்கம். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வகுத்து தந்த கோட்பாடு, கொள்கையின்படி சட்டப்பேரவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுரை வழங்கினர்.

ஒரு கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிக்கு செல்வது என்பது அவரவர் விருப்பம். கழகத்தில் இணைந்தால் ஹீரோ. தி.மு.க.வில் சேர்ந்தால் ஜீரோ. இதுதான் நடக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் கழக அரசு பெரும்பான்மையுள்ள அரசு என்பதை
உணர்ந்திருக்கிறார். அதற்கு நன்றி.

மழை நீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு பணிகளை அரசு செய்து வருகிறது. ரூ.1500 கோடி நிதியை முதல்வர் குடிமாராமத்து பணிக்கு ஒதுக்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள வறட்சிக்கும் தமிழக முதல்வர் ரூ.1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். தமிழகத்திற்க்கு 7500 எம்எல்டி தண்ணீர் தேவை உள்ளது. சென்னையில் 520 எம்.எல்.டி.க்கு மேல் தண்ணீர் அளித்து கொண்டிருக்கிறோம்.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு செயல்பட்டு வருகிறது. குடிமாராமத்து பணியின் பலன் அதிக மழை
பெய்யும்போதுதான் தெரியும். எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்.

டிடிவி தினகரன் ஒன்றுமில்லாத நபர். இவருக்கு ஊடகங்கள் தேவையற்ற வகையில் விளம்பரம் செய்து வருகின்றன. அ.ம.மு.க. ஒரு கட்சியே இல்லை.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.