சிறப்பு செய்திகள்

கழகத்தில் தான் தொண்டன் தலைவன் ஆக முடியும் தி.மு.க.வில் தொண்டன் தலைவன் ஆகவே முடியாது – வேலூர் பிரச்சார கூட்டங்களில் துணை முதலமைச்சர் பேச்சு…

வேலூர்:-

நல்லவர்கள் ஒன்று கூடி வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் அமைத்திருப்பதோ வெறும் வெற்றுக் கூட்டணி என்றும், கழகத்தில் தான் தொண்டன் தலைவன் ஆக முடியும், தி.மு.க.வில் எந்த தொண்டனும் தலைவன் ஆக முடியாது என்றும் வேலூர் பிரச்சார கூட்டங்களில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேலூர் மாவட்ட வாணியம்பாடியில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வணிகவரித் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி உடன் இருந்தார்.

பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னற்ற கழக-பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேலூர் மாவட்ட, வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நீதிக் கட்சி வெற்றி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இந்த நாடாளுமன்ற தொகுதியின் பல்வேறு தேவைகளை அறிந்து புரிந்து, பல்வேறு நலத்திட்டங்களையும், மத்திய-மாநில அரசின் மக்களுக்கான தொலை நோக்குத் திட்டங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள நல்ல வேட்பாளர் தேர்தல் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்.

நல்லவர்கள் ஒன்று கூடி வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளார்கள். தி.மு.க–காங்கிரஸ் கட்சிகள் ஒன்றுகூடி வெற்றுக் கூட்டணி அமைத்துள்ளார்கள். தி.மு.க.–காங்கிரஸ் இருகட்சிகளும் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. நமக்கும், கர்நாடகத்திற்கும் காலம்காலமாக இருந்து வந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 2007-ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அம்மா அவர்கள் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, மு.கருணாநிதியை காவேரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு அரசாணை பெறவேண்டுமென்றும், அப்போதுதான் தண்ணீர் வரும் என்றும் அம்மா அவர்கள் வலியுறுத்தினார்.

ஆனால் மத்தியில், காங்கிரஸ்-திமுக உடனான கூட்டணி ஆட்சி 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை இருந்தபோது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக்கட்டிலில் இருந்தது. ஆனால் தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை, காவேரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினையை தீர்க்க 2012-ம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய திமுக கூட்டணி ஆட்சியில் பாரத பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார். அதுவும் பயனில்லாமல் போனது.

பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி சட்டப்போராட்டம் நடத்தி அம்மா அவர்கள் 2013ஆம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக அதை செய்யவே இல்லை.

தனது 33 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்வில் தான் மகிழ்ச்சியடைந்த நாளாக, காவேரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான் என்று நெகிழ்ச்சியுடன் அம்மா சொன்னார் என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் 2011-ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார். தொலைநோக்கு திட்டமாக 2023ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக தன்னுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழகத்தில் ஏழை, எளிய குடிசைவாழ் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரிட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இவ்வியக்கத்தில் எந்த தொண்டனும் முதலமைச்சராக வரமுடியும். அ.தி.முக.வில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகவும் ஆக முடிகிறது. ஆனால் தி.மு.க.வில் எந்தவொரு தொண்டனும் தலைமைப் பொறுப்பு வகிக்கமுடியுமா?

இது தர்மத்திற்காக பாடுபடும் கட்சி, இது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எஃகு கோட்டையாக திகழ்கிறது. அம்மா அவர்கள் ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000, பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000 ஆகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார். மீண்டும் தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் அம்மா அவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதிஉதவி ரூ.6000 என இருந்தது 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் இன்று நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மாணவ செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ செல்வங்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கினார்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்பகுதியில் 2007-2011 வரை திமுக ஆட்சியில் தொடர்ந்து ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டை அவர்களால் தடுக்க முடிந்ததா? ஆனால் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக மின்சாரம் துண்டிப்பே இல்லாத பகுதியாக மாற்றினார்.

இத்தொகுதியில் மக்களின் முக்கிய பிரச்சினைகளான குடிநீர் பிரச்சனை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள இம்மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியின் குறிக்கோள். புரட்சித்தலைவி அம்மா வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளோம்.

எய்மஸ் மருத்துவமனை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 60,00,000 பேருக்கு ரூ2,000 வழங்கப்பட்டது. அதைப் பொறுத்து கொள்ள முடியாமல் திமுக கட்சிக்காரர்கள் உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களுக்கான கட்சியாக திகழ்வதால்தான் புனித யாத்திரை மெக்காவிற்கும் மற்றும் ஜெருசேலத்திற்கு செல்வதற்கும், நோன்பு கஞ்சி தயாரிப்பது போன்றவற்றிற்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைத்து சமுகத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருந்தவர் தமது புரட்சி தலைவி அம்மா.

அம்மாவின் ஆட்சியில் தான் ஒரு மனிதனுக்கு உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் என்ற நிறைவான நல்ல ஆட்சியை அமைத்துத் தரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அதுவும் இலவச அரிசியை வழங்கும் திட்டத்தினை அம்மா அறிவித்தார். அ.இ.அ.தி.மு.க ஆட்சி இன்றைக்கும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது இது அம்மாவின் ஆட்சி, இது மக்களுக்கான ஆட்சி.

அம்மா வழியில் இன்று சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். தற்போது அமைந்துள்ள மெகா கூட்டணி, மகுடம் ஏற்றும் வெற்றி கூட்டணி.

மக்களே நீங்கள்தான் எஜமானர்கள், நீங்கள் உன்னதமான தீர்ப்பு வழங்க கடமைப்பட்டவர்கள், ஜனநாயகத்தில் நமக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மெகா கூட்டணியை அமைத்துள்ளோம், இதனை கருத்தில் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி) அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று சாதனை நிகழ்த்தி வெற்றிப் பெற வைக்குமாறு உங்களது பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளும் நமதே, நாற்பதும் நமதே!

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.