சிறப்பு செய்திகள்

கழகத்தில் மட்டுமே விசுவாசமுள்ள தொண்டன் தலைவனாக முடியும் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்…

மதுரை:-

கழகத்தில் மட்டுமே விசுவாசமுள்ள தொண்டன் தலைவனாக முடியும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொளுத்தும் வெயிலில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

உடன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, கருப்பையா, ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லபாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கூரியர் கணேசன், குமார், அழகுராஜா உள்பட பலர் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். உங்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். அது மட்டுமல்லாது மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்கு திட்டங்களை இப்பகுதிக்கு தந்திடும் வண்ணம் நிச்சயம் உழைப்பார்.

மக்களாகிய நீங்கள் தான் எஜமானார்கள். மத்தியில் காங்கிரஸ்,தி.மு.க. கூட்டணி அரசு இருந்தபோது அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள். அதேபோல் அம்மா ஆட்சி சிறப்பான திட்டங்களை உங்களுக்கு தந்தது. யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் தந்தது என்று எடைபோடும் தேர்தலாகும். கருணாநிதி ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் வேதனையைத் தான் தந்தார்கள். மத்தியில் காங்கிரசுடன் 10 ஆண்டுகள் தி.மு.க. அங்கம் வகித்தது. அதில் 10 அமைச்சர்கள் இடம் பெற்றனர். அவர்கள் கொழு பொம்மையாக தான் இருந்தார்கள். எந்த திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி அளவில் தமிழகத்தின் வரிப்பணம் மத்திய அரசுக்கு சென்றது. அதன் மூலமாவது தமிழகத்துக்கு திட்டங்களை கொண்டு வந்தார்களா? நிதியையாவது பெற்றுத்தந்தார்களா?

சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தபோது அம்மா அவர்கள் இத்திட்டம் சரிவராது. ஏனென்றால் கடலில் உள்ள மணல்கள் நகரும் தன்மை உடையது. எவ்வளவு ஆழப்படுத்தினாலும் தோல்வியில் தான் முடியும் என்று சொன்னார். ஆனால் எதையும் கேட்காமல் ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் மக்கள் வரிப்பணத்தை வீணாக போட்டார்கள். இதுபோன்ற கொடுமைகள் தான் கடந்த கால ஆட்சியில் இருந்தது.

அதேபோல் காவேரி பிரச்சினையில் ஒரு நல்ல தீர்ப்பை அம்மா அவர்கள் பெற்றுத் தந்தார்கள். தி.மு.க. கூட்டணி பெற்றுத் தரவில்லை. தஞ்சை தரணி விவசாயிகள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியபோது எனது 33 ஆண்டு கால அரசியலில் நான் மகிழ்ச்சியாக இருந்த நாள் தான் காவேரி பிரச்சினையில் வெற்றி பெற்ற நாள் என்று சொன்னார். தி.மு.க. கூட்டணியினர் நினைத்திருந்தால் இந்த பிரச்சினைக்கு 24 மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்க முடியும்.

முல்லை பெரியாறு பிரச்சினையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது அணை நீர் மட்டத்தை 136 அடியில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளாம் என்று தீர்ப்பை பெற்றுத் தந்தார். பேபி அணையை பழுது பார்த்த பின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று பெற்று தந்தார். தற்போது 142 அடியாக சேர்க்கப்பட்டுள்ளது. நிச்சயம் அணையின் நீர் மட்டத்தை 152 அடிக்கு தேக்கி காட்டுவோம்.

காளைகளை விலங்கியலில் சேர்த்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியாகும். இதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் 10 லட்சம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். அப்போது சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பாரத பிரதமரை நேரில்சந்தித்து கூறினேன். பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார்.

அது மட்டுமல்லாது ரூ.1500 கோடி மதிப்பீட்டில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பெற்று தந்துள்ளோம். அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஒரே அரசு கழக தான். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்னையும், முதலமைச்சரையும் பார்த்து தீ வைப்பவர்கள் என்று கூறி வருகிறார்.

நான் இந்த கூட்டத்தின் வாயிலாக அவரை கேட்கிறேன்.உங்கள் மாமன், மருமகன் பிரச்சினையின்போது மதுரையில் தி.மு.க. அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 அப்பாவிகள் பலியானார்கள். யார் தீ வைத்தது என்பதை ஸ்டாலின் கூற வேண்டும். ஆனால் மக்களுக்கு நன்றாக தெரியும். எங்களை அம்மா அவர்கள் வானத்தில் இருந்து கவனித்து வருகிறார். நாங்கள் ஒழுங்காக மக்கள் பணி ஆற்றுகிறோமா என்று பார்க்கிறார். இதனால் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம்.

2016-ம் ஆண்டு ஸ்டாலின் ஜோதிடர் பேச்சை கேட்டு கலர், கலராக சட்டை அணிந்து டீ கடையில் குடித்தார். டிராக்டர் ஓட்டினார். உச்சக்கட்டமாக கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் ரோடு போட்டு பல வேஷம் காட்டினார். நீ்ங்கள் டீக்கடையில் அதிகபட்சமாக டீ தான் குடிக்க முடியும். நாங்கள் டீக்கடையே நடத்தியவர்கள். ஸ்டாலினின் பாட்சா எங்களிடம் ஒருபோதும் பலிக்காது. இந்த இயக்கத்தை கருணாநிதியால் கூட அசைக்க முடியவில்லை. உங்களால் எப்படி அசைக்க முடியும். தொட்டு கூட பார்க்க முடியாது. இந்த இயக்கம் மாபெரும் ஆலமரம். ஒன்றரை கோடி தொண்டர்கள் விழுதுகளாக உள்ளார்கள். அதனால் எங்கள் இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது.

விசுவாசம் உள்ள சாதாரண தொண்டர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் உயர் பதவிக்கு வர முடியும். தி.மு.க. பரம்பரை பரம்பரையாகத் தான் தலைவர் பதவிக்கு வர முடியும்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், கரும்பு துண்டு உள்ளிட்ட பரிசு தொகுப்புடன் ரூ.100 வழங்கினார். நாங்கள் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கினோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தி.மு.க. வழக்கு போட்டு தடுத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு ரூ.2000 நிச்சயம் வழங்கப்படும். அலங்காநல்லூரியில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் நிச்சயம் உருவாக்கப்படும். அலங்காநல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.

எங்கள் இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று அம்மாஅவர்கள் சூளுரைத்தார்கள். அவரது வாக்கு தற்போது நிறைவேறி வருகிறது. ஏனென்றால் நான் பிரச்சாரத்துக்கு வரும்போது ஒரு தாயின் கையில் இருந்த இரண்டு வயது பெண் குழந்தை இரட்டை விரலை காண்பித்தது. இதன் மூலம் அம்மா சொன்ன வாக்கு பலித்து விட்டது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.