தற்போதைய செய்திகள்

கழகத்தில் மெகா கூட்டணியை கண்டு எதிர்க்கட்சிகள் கலக்கம் – கே.என்.இராமச்சந்திரன் எம்.பி. முழக்கம்…

காஞ்சிபுரம்:-

கழகத்தின் மெகா கூட்டணியை கண்டு எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன என்று கே.என்.இராமச்சந்திரன் எம்.பி. கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சுங்குவார்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் சிங்கிலிபாடி டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக துணைச் செயலாளர் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், ஒன்றியக் கழகச் செயலாளர் எறையூர் இ.பி.முனுசாமி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

எனக்குப் பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியும் என்று இதயதெய்வம் அம்மா அவர்கள் குறிப்பிட்டதை நிரூபிக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைத்த மெகா கூட்டணியை கண்டு எதிர்கட்சிகள் கதிகலங்கி உள்ளன. குறிப்பாக மு.க.ஸ்டாலின் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். கழகம் அமைத்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனை அனைத்து ஊடகங்களும் உறுதிப்படுத்தி விட்டன.

இப்போது ஸ்டாலின் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். என்ன பேசவேண்டும் என்று தெரியாமல் ஏதோ ஏதோ வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். திருப்பூரில் துறைமுகம் அமைப்பேன் என்கிறார். அங்கு எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல் தி.மு.க.வுக்கு முகவுரை நான் எழுதுவேன். முடிவுரையை கருணாநிதியை எழுதுவார் என்றார். கருணாநிதி செய்யவேண்டிய காரியத்தை அவருடைய மகன் ஸ்டாலின் செய்யத் தொடங்கி விட்டார்.

இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது ஏதோ கண்டனம் தெரிவிப்பதுபோல் போலியான ஒரு உண்ணாவிரதத்தை கருணாநிதி நடத்தினார். தமிழர்கள் எல்லோரும் கொல்லப்பட்ட பின்னர் இங்கிருந்து இலங்கை சென்ற கருணாநிதியின் மகள் கனிமொழி தமிழர்களை கொன்றுவித்த ராஜபக்சேவிடம் பரிசு வாங்கி வருகிறார். தமிழர்களுக்கு இவர்கள் செய்த கொடுமை இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? இலங்கையில் போர் நடந்தபோது தமிழர்கள் கொன்று குவிப்பதை தடுக்க வேண்டி பல்வேறு தரப்பினரும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை நிராகரித்தது காங்கிரஸ் அரசு. அத்தகைய காங்கிரசுடன் தான் இன்றைக்கு தி.மு.க. கைகோர்த்து நிற்கிறது. தமிழர்களின் நலன் காப்பதைவிட தமிழர்களுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களை செய்தது தி.மு.க..

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் காவேரி நதி நீர் விவகாரத்தில் அன்றைய தினம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறிய காரணத்தினால் பல்வேறு சோதனைகளை தமிழக மக்கள் சந்தித்தார்கள். ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்களால்தான் இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கப்பெற்றது. அதேபோல் முல்லை பெரியாறு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு எதிராகவே தி.மு.க. அரசு செயல்பட்டது.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டும்தான் தமிழக மக்களின் நலன் காக்க போராடியது. அதில் வெற்றியும் கண்டது. அதனால்தான் தி.மு.க.விற்கு பின்பு உருவான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து சாதனை புரிந்துள்ளது. கழக அரசை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன் பேசினார்.