தற்போதைய செய்திகள்

கழகத்தை அழிக்கவோ வெல்லவோ எந்த சக்தியாலும் முடியாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேச பேச்சு…

தேனி:-

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கழகத்தை அழிக்கவோ, வெல்லவோ எந்த சக்தியாலும் முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட போடி நகரம், போடி ஒன்றியம், சின்னமனூர் ஒன்றியம், தேனி ஒன்றியம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் பழனிராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சற்குணம், விமலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியோடும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆதரவுடன் போட்டியிடும் ப.ரவீந்திரநாத்குமார் புரட்சித் தலைவர் காலத்திலிருந்து சுமார் 47 ஆண்டுகளாக கழகத்தை வெற்றி பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கின்ற அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று சொன்னார்.

போர்களத்திற்கு செல்லும் முன், தனது குலதெய்வத்தை, இஷ்ட தெய்வத்தை, காவல் தெய்வத்தை வணங்கி விட்டு செல்கின்ற வீரர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். அதுபோல் கழகத்தின் காவல் தெய்வமாய், குலதெய்வமாய் இருக்கின்ற நிர்வாகிகளிடம் , தொண்டர்களிடம் ஆசி பெற வந்துள்ளார். அவர் மக்களுக்கு சிறப்பான பணியை செய்ய வேண்டும் என்று பல லட்சியங்களோடு கனவுகளோடு வந்துள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கான திட்டங்கள், தொழிலாளர்களுக்கான திட்டங்கள் கொண்டு வர முடியுமா என்று எதிர்கட்சியினர் கேட்கின்றனர். அவர்களெல்லாம் வாய் சொல்லின் வீரர்கள். நமது வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் செயல் வீரர். எனவே திட்டங்களை கொண்டு வருவதில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார்.

இங்கே வாயிலேயே வடை சுடும் இரண்டு பேர் வந்துள்ளனர். ஒருவர் ஈரோட்டிலிருந்து வந்துள்ளார். இன்னொருவர் இந்த மாவட்டத்திலேயே உள்ளவர். நமது வேட்பாளரை பற்றி எதிர்கட்சியினர் என்ன குறை சொல்லலாம் என்று தேடி தேடி பார்த்து வாரிசு அரசியல் என்று கூறுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா இருக்கும் போதே இவருடைய உழைப்பு. உண்மை விசுவாசம் இவற்றை பார்த்து பாசறை மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்தார். அத்தகைய நல்லவரை, விசுவாசியை, தகுதி உடையவரை உங்களிடம் ஒப்படைக்கிறோம். இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனி தொகுதி முதல் இடத்தை பிடிக்க வேண்டும். புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட நமது இயக்கத்தின் சின்னத்தை அழிக்க பார்க்கிறார்கள். கழக சின்னத்தை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஒன்றரைகோடி தொண்டர்கள் இருக்கும் வரை எந்த சக்தியாலும் கழகத்தை அழிக்க முடியாது.

இப்ப ஒருத்தர் சின்னத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் தேடி முடிப்பதற்குள் தேர்தலே முடிந்து விடும். பாரத பிரதமரை அடையாளம் காட்டுவோம் என்று சொன்னவர் இன்று அவருடைய சின்னத்தையே அடையாளம் காட்ட முடியவில்லை. இளங்கோவனிடம் கேட்டால் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்வார். ஆனால் நமது வேட்பாளரிடம் கேட்டு பாருங்கள். அவர் நரேந்திர மோடி என்று தெளிவாக சொல்வார். எத்தனை பேர் வந்து கோரிக்கை வைத்தாலும் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றிட நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். இவரை நீங்கள் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:-

1972-ல் புரட்சித் தலைவர் நமது இயக்கத்தை தோற்றுவித்த போது விதையாக இருந்து விருட்சமாக வளர உறுதுணையாக இருந்த நிர்வாகிகளாகிய உங்களையெல்லாம் சந்திக்க வந்துள்ளேன். புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் நம்மிடமே இருந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். யார் வேட்பாளர் என்றெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை தேடி ஓட்டு போடுவர். காரணம் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தப்படுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் உண்டு. இப்பகுதியில் துணை முதல்வர் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்தியாவை வல்லரசு நாடாக, பாதுகாப்பும், வாழ்க்கை வளம் நிறைந்த நாடாக திகழ நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். கழக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.