தற்போதைய செய்திகள்

கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் காணாமல் போய் விட்டார்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு…

காஞ்சிபுரம்

கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் காந்தி ரோடு, ஏ.இ.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் நம்முடைய செயல்பாட்டை அனைத்து தரப்பினரும் உற்று நோக்குகின்றனர். இதனை குறிப்பிடுவதற்கு அ.தி.மு.க மிக வலிமையோடு இருக்கின்றது என்பதற்கு இது உதாரணம். கழகத்திற்கு எத்தனையோ சோதனைகள் ஏற்பட்டது. இருந்த போதிலும் கழகத்திலிருந்து யாரும் பிரிந்து தி.மு.க.விற்கு செல்லவில்லை. இதன் மூலம் கழகம் எஃகு கோட்டையாக விளங்குகிறது என்பதனை நாம் உணர முடிகிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் கழக அரசு இன்றைக்கு 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடுகள் கொண்டு வந்து இந்தியாவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பத்து லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் இந்த அரசால் கிடைக்கப்பெற்றுள்ளது. இது இந்தியாவில் எந்த அரசும் செய்யாத சாதனையை கழக அரசு செய்துள்ளது. இதன் மூலம் அம்மா விட்டுச்சென்ற பணிகளை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அம்மாவின் ஆன்மா நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றது என்பதனை மெய்பிக்கும் வகையில் நமக்கு எதிராக நின்றவர்களுக்கு சின்னம் கிடையாது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எத்தனையோ பேர் இந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று என்று நினைத்தார்கள். அப்படி நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள். எத்தனையோ சோதனைகளை சந்தித்து அந்த சோதனைகளையெல்லாம் வென்று வெற்றிக்கொடி நாட்டிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை யாராலும், எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

ஸ்டாலின் தளபதியாகத் தான் இருப்பாரே தவிர அவரால் ஒரு தலைவராக வர இயலாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருப்பூரில் ஸ்டாலின் வந்து பேசினார். அவர் பேசிய அந்த பேச்சை கேட்டு நானே அசந்து போனேன். ஏனென்றால் திருப்பூரிலே துறைமுகத்தை விரிவுப்படுத்துவேன் என்று அவர் சொன்னார்.

திருப்பூரிலே எங்கே துறைமுகம் இருக்கிறது. இவர் இப்படி பேசியதை பார்த்தால் வெறும் கேலி கூத்தாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் காவேரி, முல்லைப்பெரியாறு போன்ற நதி நீர் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்காக எந்தவொரு போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இதற்கான போராட்டங்களை மேற்கொண்டு வெற்றிகொடி நாட்டியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியினை பெற நாம் உறுதிகொள்வோம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்

முடிவில் காஞ்சிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.பி.ஸ்டாலின் நன்றி கூறினார்.