தற்போதைய செய்திகள்

கழகத்தை போல் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கேள்வி?

சேலம்:-

கழகத்தை போல் தி.மு.க. தனித்து போட்டியிடத் தயாரா? என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

சேலம் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் எம்.நடேசன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி,வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அறிவித்த திட்டங்களையெல்லாம் சிறப்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில் துணை முதல்வர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் ஏழைகளின் நலன் கருதி போடப்பட்டுள்ளது. இப்படி மக்களுக்கு சேவையாற்றி வரும் கழக அரசை பார்த்து மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனித்து நிற்க ரெடியா என்கிறார். அதற்கு துணை முதல்வர் சிறப்பான முறையில் கழகம் மட்டுமே 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட்டது. எனவே எல்லா கட்சிகளும் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால் கழகமும் போட்டியிடத் தயார் என்று பதிலளித்தார். திராணி இருந்தால் திமுக தனித்து போட்டியிடட்டும்.

வருகின்ற 24-ந்தேதி புரட்சித்தலைவியின் 71 வது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சேலத்தில் உள்ள அண்ணா பூங்காவில் உள்ள புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி சிலைகளுக்கு மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மண்ணின் மைந்தர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் உள்ள புரட்சித் தலைவி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு விமானம் மூலம் சேலம் வருகின்றனர்.

சேலம் மாநகருக்கு வருகை தரும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை சிறப்பான முறையில் நாம் வரவேற்க வேண்டும். அன்று நகரம் முழுவதும் கழக கொடிகளை பறக்கச் செய்திட வேண்டும். அரசு விழாவில் ஒரு வார்டிற்கு குறைந்தது 500 நபர்கள் வீதம் 30 ஆயிரம் நபர்களை விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அம்மா பிறந்தநாளில் வட்ட கழக செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.