தற்போதைய செய்திகள்

கழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் முழக்கம்…

சேலம்

புரட்சித்தலைவி அம்மா வழியில், அதே ராணுவக் கட்டுக் கோப்புடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியின் முகவரியாகத் திகழும் என்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியக் கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வீரபாண்டி ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.வருதராஜ் தலைமை தாங்கினார். பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணி, துளசிராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இதில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், வீரபாண்டி தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மனோன்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், மக்களுக்கு அவசியமான கல்வி வேலைவாய்ப்பு, உணவு, இருப்பிடம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தருவதில் தமிழகத்தை இந்தியாவின் முதல்நிலை மாநிலமாக வளர்ச்சி பெறச் செய்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உழைப்பின் சிகரமாய், உண்மையின் மறுவடிவமாய், மக்களுக்கு வாரி வழங்குவதில் தெய்வத்தாயாய், மக்கள் பணி செய்வதில் தன்னலமற்ற தியாகத் தலைவியாகத் திகழ்ந்தவர். மக்களோடு மக்களாய், மக்களுக்காக இரவு, பகல் பாராது, தமிழக நலனுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் தான் புரட்சித்தலைவி அம்மா.

புரட்சித்தலைவி அம்மா “மகத்தில் பிறந்து, ஜெகத்தினை ஆண்ட மாதரசி, விண்ணும், மண்ணும் உள்ளவரை தமிழக மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழும் தெய்வமாக, அன்னை சந்தியாவின் மகளாய்ப் பிறந்து, இந்தியாவின் மகளாய் வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா” திரைத்துறையிலும், அரசியலிலும் பல்வேறு போராட்டங்களுடன், சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து இந்திய தேசத்தின் சாதனைப் பெண்ணாக, மகத்தான ஆளுமை பெற்ற தலைவியாக திகழ்ந்தவர்.

புரட்சித்தலைவருக்குப் பின்னால் கழகத்தை தன் கண்ணின் இமை போல் காத்து தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தாயுள்ளத்தோடு அரவணைத்து இன்று இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமாகவும், இந்தியாவின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தையும், அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வுக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்.

1991, 2001, 2011, 2016 வரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, நினைத்ததை சாதிக்கும் போராட்டக் குணமுடையவராக, ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக புரட்சித்தலைவி அம்மா செய்து காட்டிய அதிசயங்கள் பார்த்தவர்களின் மனங்களை விட்டு இன்னும் அகலவே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போன்று அரசியலில் பிரகாசித்தவர் யாருமில்லை என்கிற அளவிற்கு வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர்தான் புரட்சித்தலைவி அம்மா.

அம்மா அவர்களின் அரசியல் வளர்ச்சி என்பது, அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவையைப் போன்றதாகும். ‘அமைதி, வளம், வளர்ச்சி; என்ற தாரக மந்திரத்துடன் தமிழகத்தை திறம்பட வழிநடத்திய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தெய்வத்தாயாக குடிகொண்டிருக்கிறார்.

“தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை” என்பதைப் போல, கழகத்திற்கு எத்தனை துயரங்கள், சதிவலைகள், சவால்கள் என ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்தாலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காப்பாற்றிய இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை யாராலும் வீழத்தி விட முடியாது. அ.தி.மு.க.வானது ஒரு தன்மானமுள்ள கட்சி. அம்மா அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஆட்சி இது. அதேபோல் ராணுவக் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற கட்சி கழகம். கழகத்தால் நடத்தப்படும் ஆட்சி, நிர்வாகம் வளமான பாதையில் திடமாக, ஸ்திரத்தன்மையோடு நடைபோட்டு வருகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஒரே மாநிலக் கட்சி கழகம் மட்டும்தான். சுயமரியாதையை விதைத்துப் பயிரிட்ட திராவிட பூமி இது. யாருடைய தலையீடும் இங்கே இல்லை. கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கமும், அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு சலனமில்லாமல் அதே கம்பீரத்தோடு, சுயமாகவும், சுயமரியாதையோடும் ஆட்சியும், கட்சியும் இயங்கி வருகின்றன.

“மன உறுதியும், நம்பிக்கையுடன் செயல்படும் தன்மையும் உள்ளவர்கள் தான் இந்த உலகம் வியக்கும் அளவில் புதியவற்றை உருவாக்கி, சாதனை புரிவார்கள்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு, 2011ல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று மாபெரும் வெற்றி, இடைத்தேர்தல்களில் வெற்றி என தொடர் வெற்றிகளை தனி ஒருவராக நின்று வெற்றி பெற்று சாதித்து காட்டினார்கள். புரட்சித்தலைவி அம்மா வழியில், அதே ராணுவக் கட்டுக் கோப்புடன், புதிய தேர்தல் வியூகத்துடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியின் முகவரியாகத் திகழும்.

இவ்வாறு கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.