சிறப்பு செய்திகள்

கழகம் தலைமையிலான மெகா கூட்டணியை தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்வீர் : வாக்காளப் பெருமக்களுக்கு கழக தேர்தல் அறிக்கையில் அன்பு வேண்டுகோள்…

சென்னை:-

சமூக நீதி, பெண் விடுதலை, மதச்சார்பின்னை, பொருளாதார பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் உயர்ந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணியை தேர்தலில் மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் என்று வாக்காளப் பெருமக்களுக்கு தேர்தல் அறிக்கையில் அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் திருநாட்டை தன் இதயத்தில் வைத்து பூஜிக்கும் இயக்கம். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நாடு என்று எப்பொழுதும் தமிழர்களின் நலன் காக்க துடிக்கும் இதயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயம். தந்தை பெரியாரின் சமூக மறுமலர்ச்சிக்கான அயரா உழைப்பையும், ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும் உரிய பங்கு கிடைத்திட பேரறிஞர் பெருந்தகை அண்ணா மேற்கொண்ட போற்றுதற்குரிய போராட்டங்களும், செயல் வடிவம் பெற்று எல்லோரும் இன்புற்றிருக்க புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் தமிழகத்தில் நடத்திய கால் நூற்றாண்டுக்கும் அதிகமான பொற்கால ஆட்சியும், அந்த இருபெரும் தலைவர்களின் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திவரும் நல்லரசும் தமிழகத்தில் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து தமிழ் நாட்டை இந்தியாவின் தலை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.

சமூக நீதி, பெண் விடுதலை, மதச்சார்பின்மை, எளியோருக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்ற லட்சியங்களை நோக்கி பயணிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் தொண்டாற்றுவதில் என்றென்றும் முன் வரிசையில் நிற்கும் வீரனாக மக்களுக்காகப் பணியாற்றும் என்ற வாக்குறுதியை அளிக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேச நலன் காக்கவும், தமிழர் தம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு, தமிழர்கள் மென்மேலும் வளர்ச்சி பெறவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.