தற்போதைய செய்திகள்

கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…

சென்னை:-

தமிழகம் மற்றும் புதுவையில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் கழகம் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 5 தொகுதிகளிலும், பா.ம.க. 7 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும், த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் ேபாட்டியிடுகின்றன.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் பெரும்பாலான கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும்  தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தென்சென்னையில் ஜெயவர்தன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தருமபுரியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேனியில் கழக வேட்பாளரும், தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ப.ரவீந்திரநாத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுதவிர கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அந்த தொகுதிகளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான கழக வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.