சிறப்பு செய்திகள்

கழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்

கழக அமைப்புத் தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களின் பதிவை புதுப்பிக்க உரிய விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமைக் கழக அறிவிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புத் தேர்தல் – 2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் திரும்பப் பெறுவது சம்பந்தமாக!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 29.1.2018 முதல் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அதே போல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் 1.3.2018 முதல் தலைமைக் கழகத்தில் பெறப்பட்டு வருகின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டி பொதுமக்களும், கழகத்தில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்காக கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்ற வண்ணமும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத் தொகையுடன் சேர்ப்பித்த வண்ணமும் உள்ளனர்.

கழக உடன்பிறப்புகளின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலனை செய்து, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் பதிவை புதுப்பித்தல் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களில் கையொப்பமிட வேண்டிய இடத்தில், சம்பந்தப்பட்ட ஊராட்சிக் கழகச் செயலாளர், ஒன்றியக் கழகச் செயலாளர்; வார்டு கழகச் செயலாளர், நகரக் கழகச் செயலாளர் மற்றும் பேரூராட்சிக் கழகச் செயலாளர்; மாநகராட்சிகளில் வட்டக் கழகச் செயலாளர், பகுதிக் கழகச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய யாரேனும் ஒருவரது கையொப்பத்தைப் பெற்று, அப்படிவத்தை உரிய கட்டணத் தொகையுடன் வருகின்ற 31.3.2018-க்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம். இந்தத் தேதிகளில் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்டு தலைமைக் கழகத்தால் திரும்பப் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கழக உறுப்பினர்களின் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.