சிறப்பு செய்திகள்

கழக அரசின் சாதனைகள் பட்டியலிட்ட முதலமைச்சர் – மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுகோள்…

திருநெல்வேலி:-

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.4.2019 அன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கே. கிருஷ்ணசாமியை ஆதரித்து தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு திறமை மிக்க வலிமையான தலைவர் மிக அவசியம். அந்த தகுதியுடைய ஒரே தலைவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக இருந்தால் தான் இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும். ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்றால் கல்வி வளம் சிறப்பாக அமையப்பெற வேண்டும். அதனடிப்படையில், அம்மாவின் அரசு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை, இந்திய அளவில் தமிழ்நாட்டில் 46.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து கிராமப்புறங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும். இதன் மூலம் நகரத்தில் உள்ள மாணவர்களைப் போன்று கிராமத்திலுள்ள மாணவர்களும் இணைய வசதி பெற்று தங்களது அறிவை பெருக்கிக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி பருவத்திலேயே அறிவுப்பூர்வமான விஞ்ஞான ரீதியான கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கிய ஒரே அரசு அம்மாவுடைய அரசு.

இதுவரை 37 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் விலையில்லா நோட்டு புத்தகம், விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா காலணி, விலையில்லா புத்தகப்பை போன்ற 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு, கல்வியில் ஒரு புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழர் திருநாளான தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டு 1.84 கோடி குடும்பங்கள் பயன்பெற வழிவகை செய்த அரசு அம்மாவுடைய அரசு. அதேபோன்று, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன். ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு 16 லட்சம் கான்கிரீட் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரமும், 100 யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

தென்காசியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.8 கோடி மதிப்பீட்டில் தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவிற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுரண்டை புறநகர் மேம்பாலம் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.2 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடமும், ரூ.1 கோடி மதிப்பில் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. தென்காசியில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரத்தில் ரூ.6.15 கோடி மற்றும் ரூ.3.18 கோடி மதிப்பில் விவசாயிகள் நலன் காக்க இரண்டு குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.44 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்காசி பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

சாதாரண விவசாய குடும்பத்திலே பிறந்து, கடினமாக உழைத்து, படிப்படியாக உயர்ந்து இன்று முதலமைச்சர் என்ற நிலைக்கு பொதுமக்களின் பேராதரவோடும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடும், நான் பதவியேற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்மாவுடைய வழியைப் பின்பற்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். எந்த ஒரு அரசும் பொறுப்பேற்ற பிறகு சீரிய முறையில் மக்கள் பணி ஆற்ற வேண்டும். அப்போது தான் அந்த அரசின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.

அந்த வகையில் சீரிய முறையில் மக்கள் பணி செய்து மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே அரசு அம்மாவுடைய அரசு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய தந்தை தி.மு.க. தலைவராக இருந்தார். அவருடைய மறைவுக்குப்பிறகு இவர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது புதிதாக ஸ்டாலினுடைய மகன் உதயநிதி பொறுப்புக்கு வர துடிக்கிறார். இது என்ன வாரிசு அரசியலா, அரச பரம்பரையா, இது ஜனநாயக நாடு இதில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்போதுமே பொய்யைத்தான் சொல்லி வருகிறார். பொய் சொல்வதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும். அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை என்பதை அனைவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆறு பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர்மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி நன்கு படித்தவர், மக்களோடு மக்களாக பழகக்கூடியவர். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர் எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.