சிறப்பு செய்திகள்

கழக அரசின் நலத்திட்டங்களை தி.மு.க. தடுத்தால் முறியடிப்போம் – முதலமைச்சர் முழக்கம்…

தருமபுரி:-

கழக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்த தி.மு.க. முட்டுக்கட்டை போடுகிறது. தி.மு.க.வின் சதியை மக்கள் ஆதரவோடு முறியடிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முழக்கமிட்டார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரூர் ஒன்றிய கழகம் சார்பில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் ஆர்.ஆர்.பசுபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அம்மா வழியில் இந்த தருமபுரி மாவட்டத்தில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இந்த மாவட்டத்திற்கு ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தார்களா இல்லை மக்கள் பணி ஏதாவது செய்தார்களா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாவட்டத்திற்கு செய்த பணிகள் திட்டங்கள் ஏராளம். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதிலே குடி கொண்டிருக்கின்ற தலைவி புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்தார் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தார். மக்கள் தான் தன் குடும்பம் என்று நேசித்தார் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கினார். அதனால்தான் மக்கள் மனதில் வாழ்ந்தார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு இயக்கம் இரண்டாக உடைந்தது. உடைந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்த பெருமை அம்மாவை சாரும். இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தன. அந்தக் கட்சிகள் எல்லாம் பிரிந்தது பிரிந்ததாகவே இருந்தன. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தன. ஆனால் உடைந்த கட்சியை இணைத்த வரலாறு அம்மாவையே சாரும். இழந்த சின்னத்தை மீட்டெடுத்தது அம்மாவையே சாரும்.

ஆகவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்சிக்காக பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் இந்த இயக்கத்துக்காக பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வெடுக்காமல் மக்கள் பணி தான் எனது பணிஎன்று இரவு பகல் பாராமல் உழைத்து உழைத்து மறைந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கின்ற பொழுது என்னென்ன திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினார்களோ, அத்தனை திட்டங்களையும் அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்தவரைக்கும் கிராமத்தில் இருக்கும் நகரத்தில் இருக்கும் அத்தனை மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.

புரட்சித்தலைவர் இருந்தபொழுது என்னென்ன கனவு கண்டாரோ அந்த கனவுகள் அத்தனையும் நிறைவேற்றுவதற்காக இரவு பகல் பாராமல் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த வழியிலே அம்மா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2006-ல் இருந்து 2011 வரைக்கும் இருந்த திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டு. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். 234தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அம்மா அவர்களிடம் முதலமைச்சர் ஆன உடனேயே தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையிலே சொன்னார்கள். தங்களின் பேராதரவோடு நான் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதல் வேலையாக தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என்று அறிவித்தார்கள்.அதை தன் வாழ்நாளிலேயே சாதித்து காட்டினார்கள்.மக்களின் பேராதரவோடு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்று அரியணையில் அமர்ந்தவுடன் சட்டமன்றத்திலேயே தெரிவித்தார்கள் நான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி கடுமையான மின்வெட்டு. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் விவசாயம் முடங்கி விட்டது. மக்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. என்னுடைய முதல் வேலை.

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுப்பது தான் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். மூன்றே மாதத்தில் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என்று சபதம் செய்தார். அதேமாதிரி ஒவ்வொரு மாதமும் மின்சார துறை அமைச்சரையும் மின்சாரத் துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழகத்திலேயே எப்படி மின்உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டு கேட்டு ஒவ்வொரு வாரமும் எடுத்த நடவடிக்கையின் காரணமாக மூன்றே மாதங்களில் மின்மிகை மாநிலமாக உருவாக்கித் தந்த பெருமை அம்மாவை சாரும்.

ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அந்த அளவுக்கு இன்றைக்கு மின்சாரம் முக்கியம் ஆகும். ஆக மின்சாரம் இருந்தால் தான் அத்தனையும் கிடைக்கும். விவசாயத்திற்கு மின்சாரம் தேவை. அதை எல்லாம் அம்மா வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா புதிய புதிய திட்டங்களை அறிவித்தார். இன்று எங்குமே மின்வெட்டு இல்லாத ஒரு சூழல் உள்ளது. திட்டம் தீட்டி தொலைநோக்கு பார்வையோடு புதியபுதிய உத்திகளை கையாண்டு அம்மா அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இன்று மின்சாரம் இருந்து கொண்டிருக்கிறது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய அளவிலேயே தமிழ்நாடு அரசு அதிகஅளவு மின்உற்பத்தி செய்த காரணத்திற்காக தமிழ் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வறட்சியிலும் அரசின் நடவடிக்கையால் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் வேண்டுமென்றே காமெடியான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். ஊராட்சி சபையை இன்று நடத்திக் கொண்டிருக்கிறார். ஆட்சியிலே என்ன செய்தார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்தனையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியில் தடையில்லாத மின்சாரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியில் விலைவாசியை கட்டுப்படுத்த இருக்கின்றோம். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் துணை முதல்வராக இருந்தார். அப்போது எல்லாம் ஏன் செய்யவில்லை ஊராட்சிசபை கூட்டவில்லை. மு.க.ஸ்டாலின் சென்று பெட்சீட்டை போட்டு உட்கார்ந்து கொண்டு குறைகளை கேட்டு வருகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் பொழுது குறைகளை தீர்க்க வேண்டியது தானே அப்போதெல்லாம் செய்யவில்லை. அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றோம்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும்போது மக்களை சந்திக்கவில்லை. குறைகளை கேட்கவில்லை. கிராமத்துக்கு செல்லவில்லை. அதனால் பாதிப்பு அடைந்தது. நான் முதலமைச்சராக இருந்துகொண்டு ஒவ்வொரு கிராமமாக சென்று குறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். என்னுடன் இருக்கின்ற அத்தனை பேரும் விவசாயிகள் அதற்குள் இருக்கின்ற பிரச்சனைகளை எளிதில் கண்டுணர்ந்து தீர்க்கின்றது இந்த அரசு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கும் அரசு அம்மாவின் அரசு.

எல்லா திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு கொடுத்தது அம்மாவின் அரசுதான் சொன்ன அத்தனையும் நிறைவேற்றி வருகிறது. அம்மாவின் அரசு இந்தியாவிலேயே இன்று சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது.இந்தியா முழுவதும் ஆங்கில நாளேடு எடுத்த சர்வேயில் இந்தியாவிலேயே தமிழகம்தான் சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதில் முன்மாதிரியாக விளங்குகிறது என்பதற்காக இந்திய குடியரசுத் தலைவரின் கையால் நான் விருது வாங்கினேன்.

எதிர்க்கட்சித் தலைவர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேண்டும் என்றே பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . நாங்கள் ஆட்சி அமைத்த உடனே பத்து நாளில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம்.மானிய கோரிக்கை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஸ்டாலின் சொன்னார். இந்த மானிய கோரிக்கை நடந்து முடிவதற்குள் கலைந்து விடும் என்றார். ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்றார். ஆனால் இப்போது இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் இந்த அரசு அடி எடுத்து வைத்துள்ளது.

மக்களின் பேராதரவோடு அம்மாவின் அரசு சிறப்பாக இன்று நடந்து கொண்டிருக்கிறது. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 1000 அத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழங்கப்படவில்லை. ஏழைகளுக்கு கொடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு கட்சி திமுக தான்.அனைத்து ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும்.

இதையெல்லாம் வழங்கிக் கொண்டிருப்பது அம்மாவுடைய அரசு. ஆகவே இன்னும் கொடுத்துக்கொண்டே இருப்போம் .இப்பொழுதுகூட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் இது தான் திமுகவின் வேலை. ஆக அதை முறியடித்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை முறியடித்து அத்தனையும் செய்வோம். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நடத்துவது மக்களுடைய ஆட்சி இல்லை என்கிறார்.

மக்களுடைய ஆட்சி தான் மக்களுக்காக தான் ஆட்சி. பொங்கல் பரிசு தந்து மக்களுடைய ஆட்சி 2000 ரூபாய் கொடுத்தது மக்களுடைய ஆட்சி. அனைத்து திட்டங்களையும் கொடுத்தது மக்களாட்சி தான். திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. எந்த பணிகளையும் செய்யவில்லை. ஆனால் அம்மாவுடைய அரசு செய்து கொண்டிருக்கிறது குடி மராமத்து பணி என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தோம். பருவமழை காலங்களில்பெய்யும் மழை நீரை அந்த ஏரி குளங்களை தேக்கி வைப்பதற்காக அந்த குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்காக நிறைவேற்றப்படுகின்ற திட்டங்களாகும்.இது முழுவதுமாக பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலமாக செய்யப்படுகிறது.

எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை. விவசாய சங்கங்கள் மூலமாக இந்தக் குடி மராமத்து பணிகள் நடைபெறுகிறது.இதனால் ஏரி குளங்களில் நீர் தேங்கி நிற்கும் பொழுது அருகில் உள்ள நிலத்தடிநீர் உயர்கிறது. விவசாயம் செழிப்பாக குடிநீர் கிடைக்கிறது. இன்றைக்கு பருவமழை பொய்த்து விட்டது. போதியமழை இல்லாததால் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் விழுப்புரம் திருவாரூர் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் எல்லாம் வறட்சியாக இருக்கிறது. போதிய மழை இல்லை. அதனால்குடி மராமத்து பணிகள் தொடங்கி ஏரிகள் குளங்களில் தண்ணீர் விடும் பொழுது தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயிகள் பயன் படக்கூடிய இந்த உன்னதமான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்துகிறது.

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது இந்த அரசு. இந்தியாவில் தமிழ்நாட்டில் 60சதவீதம் பேர் வேளாண்மையைநம்பி இருக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கிறார்கள். இருக்கின்ற நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதனால் நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.விவசாயிகளுக்குத் தேவையான அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது அம்மாவின் அரசு.

வேளாண் இடுபொருட்கள் கருவிகள் வாங்க அரசு மானியம் வழங்குகிறது. சேலத்தில் நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு 200 டிராக்டர் கொடுத்தோம். ஆக விவசாயிகள் வேளாண் பெருமக்கள் வேளாண் கருவிகள் பெற்று அதனை பயன்படுத்தி வேளாண் தொழிலை ஏற்படுத்துவதோடு விளைச்சல் அதிகமாக பெற வைத்தது. தமிழக அரசின் செயல்பாட்டால் வேளாண் உற்பத்தி பெருக்கத்தால் இந்தியாவில் உணவு உற்பத்தியில் அதிகளவு தமிழ் நாடு உற்பத்தி செய்து கிர்ஸ் கர்மான் விருது மத்திய அரசிடம் இருந்து பெற்றது. அம்மாவின் அரசு. இன்று வேளாண்மைதொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னைக்கு அருகில் 2,000 கோடியில் மிக பிரம்மாண்டமான உழவர் பூங்கா அமைக்கின்றோம்.இதில் விவசாய பெருமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களில் உற்பத்தியாகின்ற காய்கறிகளை முறையாக விற்பனை செய்ய அதிகலாபத்தோடு விற்பனை செய்ய கிட்டத்தட்ட 400 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அருகில் அம்மாவின் அரசு அமைகின்றது. இது அனைத்தும் விவசாயிகளுக்கு செய்த நன்மை அல்லவா? உங்க திமுக ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள் . எதுவும் செய்யவில்லை. ஆசியாவிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்கா 396கோடியில் சேலத்தில் 900ஏக்கரில் அந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கின்றோம் .

விவசாயிகள் கால்நடைகள் வளர்க்கிறார்கள். அந்த கால்நடைகள் அதிகளவு உற்பத்தி செய்ய நாட்டுமாடுகள் வளர்க்க, கலப்பின மாடுகள் உற்பத்தி செய்வதற்கு இந்தத் தாவரவியல் பூங்கா அமைக்கப் படுகிறது. பசு மாடு வளர்க்கும் திட்டம், காளை வளர்க்கின்ற திட்டம், கலப்பின பசுக்கள் வளர்க்கும் திட்டம் ஆடு வளர்ப்பு திட்டம் மீன்,கோழி வளர்ப்பு திட்டங்கள் அத்தனையும் அங்கே அமைக்கப்படுகிறது.ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் இந்த தாவரவியல் பூங்கா அமைக்கப் படுகிறது அவ்வாறு அமைக்கப்படும் போது தமிழகத்தில் உள்ள ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள்.

மருத்துவத்துறையில் அம்மாவின் அரசு சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற வேண்டுமானால் காப்பீடு தொகை இரண்டு லட்சமாக இருந்ததை ஐந்து லட்சமாக உயர்த்தியது அம்மாவின் அரசு. கருவில் இருக்கும் குழந்தைக்கும் திட்டங்களைத் தீட்டி அதை நல்ல முறையில் வளர ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது அம்மாவின் அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு நவீன மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் பொழுது அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் அனைவரும் சந்தித்து என்னிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது திண்டுக்கல்லில் இரண்டு கைகளும் இல்லாத ஒரு தொழிலாளி . அந்த தொழிலாளிக்கு இறந்தவர் உடலிலிருந்து இரண்டு கைகளை எடுத்து பொருத்துவோம் என்று சொன்னார்கள் . பிறகு அந்த தொழிலாளிக்கு இறந்தவர் கைகளை எடுத்து பொருத்தி சாதனை படைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தத் தொழிலாளி எனக்கு கைகொடுத்தார்.இந்தியாவில் எந்த அரசு பொது மருத்துவமனையிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு கைகள் பொருத்தப்பட்ட வரலாறு கிடையாது .

அந்த வரலாற்றை தமிழ்நாடு மருத்துவர்கள் செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். இது எல்லாம் சாதனை அல்லவா. இதுவெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவெல்லாம் அவருக்கு தெரியாது. அம்மாவின் அரசு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து செய்து வருகிறது. சாதனை மேல் சாதனை அம்மாவின் அரசு செய்து வருகிறது. சிறந்த நிர்வாகத்தால் பல துறைகளில் சாதனை படைத்து மத்திய அரசின் விருதுகளை பெற்று வருகிறது அம்மாவின் அரசு.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.