சேலம்

கழக அரசின் பொற்கால ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதம்…

சேலம்:-

கழக அரசின் பொற்கால ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேறி வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

சேலம் புறநகர் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.முருகேசன் வரவேற்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.காமராஜ், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதோடு, முதலமைச்சரின் கவனத்திற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை எந்த ஒரு சிபாரிசும் இன்றி பயனாளியின் உண்மை நிலையினை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்கள். எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகிறோம்.

ஆகவே, என்ன நினைக்கிறாய் என்பதில் எச்சரிக்கையாய் இரு என்பார் விவேகானந்தர். உயர்ந்த எண்ணங்களின், தலை சிறந்த ஆளுமை வடிவமாகவும், எளிமையின் சிகரமாகவும், அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திகழ்வதுடன், மக்களுக்கு பயன்படக்கூடிய நல்ல திட்டங்களால் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேறி வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காலத்தால் அழியாத சாதனைகளை கழக அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளன்று, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி மூலம் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர்கள் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும். அதே போல், இந்த ஆண்டு புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளன்று, ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளில், எப்பொழுதும் முதலிலேயே கூட்டணி முடிவை அறிவிப்பது மட்டுமல்லாமல், வேட்பாளர்கள் யார், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதையும் முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். அதே போன்று அம்மாவின் வழி வந்த, முதல்வரும், துணை முதல்வரும், கூட்டணி பற்றிய அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டதுடன், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டினை உருவாக்காத நிலையில், கழக அரசு முதன் முறையாக உருவாக்கிதன் வாயிலாக, அம்மாவின் வாரிசுகள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

இந்தியத் திருநாட்டின் இறையாண்மைக்கும், மக்களின் அமைதியான வாழ்விற்கும், தாய்த்திருநாட்டின் பாதுகாப்பிற்கும், துளியும் பங்கம் வராத அளவிற்கு துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, எந்த ஒரு நாடும், இந்தியாவை எதிர்க்கவே அஞ்சக்கூடிய அளவிற்கு, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் விதத்தில், பிரதமர்நரேந்திரமோடியின் உறுதியான நடவடிக்கைகளால், பிரதான எதிர்க்கட்சிகளால் பாராட்டும் அளவிற்கு அவரின் ராணுவ நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்தன. மேலும், ஏழை, எளிய விவசாயிகள் வாழ்வு வளம் பெறும் வகையில், ஆண்டுதோறும் அவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமானது அனைவராலும் வரவேற்கக் கூடிய திட்டங்களாகும்.

பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டு மக்கள் மேம்பாட்டிற்காகவும், தினந்தோறும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், நேரடியாக மக்களைச் சந்தித்து அவற்றை அர்ப்பணிப்பதிலும் மிகவும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய நான்கு வழிச்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் புதிய ரயில் வசதிகள் ஆகியவற்றைத் தொடங்கியும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியது என எண்ணற்ற திட்டங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகின்றன.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்ததன் பலனாக, தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இதே போன்ற சிந்தனையோடு, பிரதமரும், இந்தியத் திருநாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ வசதியை அளிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம், நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களாகும்.

இந்தியாவை வழி நடத்தும் அறிவு, ஆற்றல், ஆளுமைத்திறன், திறமையான முடிவை துணிவுடன் எடுக்கும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும். இந்திய திருநாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக திகழும் நரேந்திரமோடியை பிரதமராக்க சபதமேற்போம். தமிழக நலன்கள், தேசிய நலன்கள் நரேந்திரமோடி ஒருவரால் மட்டுமே பாதுகாக்க முடியும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புக்கள் அனைவரும் “நாளை நமதே நாற்பதும் நமதே”, “வேண்டும் மோடி, மீண்டும் மோடி” என்ற வெற்றி முழக்கத்தோடு, வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு அயராது உழைத்து வெற்றிக் கனியைப் பறிப்போம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.