தற்போதைய செய்திகள்

கழக அரசு இன்னும் நூறாண்டுகள் நிலைத்திருக்கும் : அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு…

திருப்பூர்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில், புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக இலக்கிய அணி இணை செயலாளர் போளூர் ஜெயகோவிந்தன், எம்.எல்.ஏ., க்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), முன்னாள் 2 வது மண்டல தலைவர் ஜெ.ஆர்.ஜான், 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கருணாகரன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-

அம்மா அவர்கள் ஆசியுடன் எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சிப் பொறுப்பில் சிறபாக செயல்பட்டு வருகிறார்கள். புரட்சித்தலைவி இருந்தபோதுதான், இந்த இயக்கத்தை உருவாக்கினார். 1972 ல் இந்த இயக்கத்தை உருவாக்கும் போது, இந்த இயக்கம் 3 நாள் கூட தாங்காது என்று தி.மு.க., வினர் சொன்னார்கள்.

அதே நேரம் கரூர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைக்கும் என புரட்சித்தலைவர் பேசினார். புரட்சித்தலைவர் அவர்களின் எண்ணமும், ஆற்றலும் புரட்சித்தலைவி அம்மாவிடம் உள்ளது. பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக 16 பொருட்களை வழங்கி சிறப்பான கல்வித்தரத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். வேலம்பாளையம் மாநகராட்சி பள்ளியை ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என பிரித்து சிறப்பான பள்ளிகளாக உருவாக்கப்படும். அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை உருவாக்க வேண்டும், என்பதற்காக நிதி ஒதுக்கிய அரசு அ.தி.மு.க., அரசு. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தட்டாமலேயே திறக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, திருப்பூரில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.‘ திருப்பூரில் துறைமுகத்தை விரிவுபடுத்தப்போவதாக சொல்லி இருக்கிறார்.’ அவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இப்படி பேசும் அவர் தளபதியாக இருப்பதற்கு தகுதியானவரே ஒழிய தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தகுதியானவர் அல்ல.திருப்பூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர் வரை உங்களால் அனைவரையும் சந்திக்க முடியும். அந்தளவுக்கு எளிமையான அரசாக இந்த அரசு உள்ளது.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

30 லட்சம் தொண்டர்களுடன் இருந்த இந்த இயக்கத்தை இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கமாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா ஆறு முறை முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் நலனுக்காக பல நல்ல திட்டங்கள் தந்தார். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று கூறி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு மட்டுமே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பரிசு பெட்டகம் என ஆரம்பித்து, முதியோர் உதவி தொகை, உள்பட பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பட்டினியே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தான் ஒவ்வொரு ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி வழங்கி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி, வளைகாப்பு என திட்டங்களை வழங்கி அழகு பார்த்தவர் அம்மா அவர்கள். இப்படி எண்ணற்ற திட்டங்களை வழங்கியதால் தான் 30 ஆண்டிற்கு பிறகு இரண்டாம் முறையும் தொடர்ந்து ஆட்சியமைத்தார் அம்மா அவர்கள். அம்மா அவர்களின் வழியில் இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த அரசு இன்னும் நூறாண்டுகள் நிலைத்திருக்கும். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

முன்னதாக, திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பேரவை இணை செயலாளர் கலைமகள் கோபால்சாமி, வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில், கே.என்.சுப்பிரமணியம், மார்க்கெட் சக்திவேல், கருணாகரன், கணேஷ், அட்லஸ் லோகநாதன், ஈஸ்வரன் அவிநாசி ஜெகதீசன், ஏ.எம்.ராமமூர்த்தி, யு.எஸ்.பழனிசாமி, புத்தரச்சல் பாபு, டாக்டர் சீனியம்மாள், கோட்டா பாலு, நீதிராஜன், ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.