சிறப்பு செய்திகள்

கழக அரசை குறை கூறுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி கிடையாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு…

மேட்டுப்பாளையம்:-

கழக அரசை பற்றி குறை கூறுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு முதல் பெரும் பள்ளம் வரை ரூ. 47 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி துவக்க விழா மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இந்த திட்டமானது 2011-ல் அம்மாவால் அறிவிக்கப்பட்டது. இந்த சாலையானது வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. அதை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று சாலை அகலப்படுத்துவதற்கான பணிகள் நிறைவேற்றப்படும். மேட்டுப்பாளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. அதில் 9 கோடி ரூபாய் செலவில் அரசு கலை கல்லூரி , ரூ. 100 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் , ரூ. 90 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு செய்துள்ளது.

இதேபோல் 70 ஆண்டு பிரச்சனையான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி வைத்தது அம்மாவின் அரசு தான் . பெரியநாயக்கன்பாளையம் முதல் மத்தம்பாளையம் வரை நான்கு வழி சாலை கவுண்டம்பாளையம் துடியலூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் போன்ற பல்வேறு திட்டங்களை நமது அரசு இந்த தொகுதிக்கு கொடுத்துள்ளது. அனைத்து குடும்பத்திற்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கொடுத்தவர் அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கழக அரசை பற்றி குறை கூறுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஏனென்றால் இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போது சும்மா இருந்தவர்கள் திமுகவினர்.

மக்களுக்காக வாழ்ந்து உயிர்நீத்தவர் அம்மா. அவரது பல்வேறு திட்டங்கள் மற்றும் விடுபட்ட அனைத்து திட்டங்களையும் அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் நிறைவேற்றி வைப்பார். மக்களிடம் சென்று உரிமையுடன் வாக்கு கேட்க அ.இ.அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உண்டு. அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி,வேலுமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, வெள்ளியங்காடு ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதிசேட், எம்.எஸ்.ராஜ்குமார், ஒப்பந்ததாரர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.