தற்போதைய செய்திகள்

கழக அரசை யாராலும் அசைக்க கூட முடியாது – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

கழக அரசை யாராலும் அசைக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அரியமங்கலம், மேல்மங்கலம், தெற்கு அரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், செல்லபாண்டி, ரவிச்சந்திரன், ராஜா, பிச்சைராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பல்வேறு இடங்களில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். முதலமைச்சர் வெளிநாடு சென்று மக்களை ஏமாற்றி உள்ளார் என்று வாய் கூசாமல் புழுகியிருக்கிறார்.

முதலமைச்சர் 13 நாட்கள் வெளிநாடு சென்று ரூ.8800 கோடி அளவில் தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்த்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இதுபோன்று திமுக ஆட்சியில் செய்ததுண்டா? ஆனால் ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருக்கும்போது பலமுறை வெளிநாடு சென்றார். அவர் எதற்காக சென்றார் என்பதை அவர் மர்மமாக வைத்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் முதலில் தடை வாங்கியது திமுக தான். அதுமட்டுமல்லாது 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் அராஜகத்தை இயற்றியவர்கள் திமுகவினர் தான். அப்போது திமுக செய்த அக்கிரமங்களை நீதிமன்றமே கண்டித்தது மட்டுமல்லாது பல இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.

ஸ்டாலின் இந்த ஆட்சி இன்று போகும் நாளை என்று கூறுகிறார். இதுவரை ஒரு லட்சம் தடவை கூறி விட்டார். அம்மாவின் ஆத்மா வழிகாட்டுதலோடு ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இந்த அரசை இன்னும் நூறு ஆண்டுகள் யாராலும் அசைக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு முதலமைச்சர் மக்களின் நம்பிக்கை பெற்றுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வாயிலாக உங்கள் முன்னிலையில் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.

தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. ஏன் எதிர்க்கட்சி உறுப்பினராக முடியாது. அதுமட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக வெற்றி பெற முடியாது. இதனை உறுதி செய்யும் வகையில் நடைபெறும் நாங்குநேரி .மற்றும் விக்கிரவாண்டி .தொகுதி இடைத்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றியை பெறும். திமுகவும் காங்கிரசும் டெபாசிட் இழக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.