தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்ட முடியுமா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்…

மதுரை:-

கழக ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்ட முடியுமா? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து சோழவந்தான் தொகுதியில் உள்ள மேற்கு ஒன்றிய பகுதிகளான தேனூர், சமயநல்லூர், தோடனேரி, வைரவநத்தம், வயலூர், சிறுவாலை, அம்பலத்தடி, அரியூர், பொதும்பு ஆகிய பகுதிகளில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் களத்தில் துரோகிகளும், விரோதிகளும் மக்களாகிய உங்களை சந்திக்க வருவார்கள். அவர்கள் தங்கள் சுயநலம் ஒன்றைத்தான் முக்கியமாக கருதுவார்கள். மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்த அனைத்து திட்டங்களையும், மக்கள் கைகளில் முதலமைச்சர் தவழ செய்துள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் உள்ளார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 35,000-க்கும் மேற்பட்ட போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தியுள்ளனர். அதையெல்லாம் முறியடித்து மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இது மட்டுமல்லாது ஆண்டிற்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் சமூகநல பாதுகாப்பு திட்டம் மற்றும் மானியத்திட்டங்களுக்காக அம்மாவின் அரசு ஒதுக்கி வருகிறது. இது போன்று எந்த மாநிலத்திலும் திட்டங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் ஆட்சியைப்பற்றி குறை கூற முடியாமல் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது தனிநபர் தாக்குதலாக பேசி வருகிறார்.

இவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த ஆட்சியில் குறை உள்ளது என்று சுட்டிக்காட்ட முடியுமா, முடியாது. ஏனென்றால் இது மக்களாட்சி, ஸ்டாலின் விமர்சனத்திற்கு மக்களாகிய நீங்கள் தகுந்த பதிலடியை கொடுக்கும் வண்ணம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை டெபாசிட் இழக்கச்செய்து புரட்சித்தலைவரின் புனித சின்னமான இரட்டை இலை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து இதுவரை இல்லாத வகையில் மாபெரும் வெற்றியை நீங்கள் தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், கழக அமைப்புச்செயலாளர் ம.முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் க.தவசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட கழக இணைச்செயலாளர் பஞ்சவர்ணம், மதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.