தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்…

தூத்துக்குடி:-

மின்வெட்டு, ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு இன்றி கழக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் தங்கியிருந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று ஓட்டப்பிடாரம் தொகுதியில் துப்பாஸ்பட்டி, தருவைகுளம், மேலமருதூர், குமாரபுரம், மேலஅரசரடி, மேலபாண்டியாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், வீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையத்தேவன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரம் பிள்ளை உட்பட பல்வேறு தியாக தலைவர்கள் பிறந்த புண்ணிய பூமி ஓட்டப்பிடாரம் தொகுதி. நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையர்களையும், கொள்ளையர்களையும் ஓட ஓட விரட்டிய இந்த மண்ணில் தற்போது தூரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க வேண்டிய பொறுப்பு ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடியார் நமக்கு கொடுத்துள்ள வெற்றி வேட்பாளர் மோகனை நாம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்.

மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கினார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டுமல்லாது, அன்றாடம் தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் பார்த்து பார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார். பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பரிசாக மக்களுக்கு எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் திட்டத்தினை அறிவித்து வழங்கினோம்.

ஆனால், திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். நிச்சயம் இந்த தேர்தல் முடிந்த பின் கழக அரசு வழங்கும். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற துரோகிகளும் கழக அரசை கவிழ்க்க பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்கின்றனர்.

இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. ஊழல் கட்சி திமுகவுக்கு இந்த தொகுதியில் இடமில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் மோகனை எதிர்த்து போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைவார்கள். ஓட்டப்பிடாரம் என்றுமே அண்ணா திமுகவின் கோட்டையாகதான் உள்ளது. இ்ந்த தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் மோகனுக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

பிரச்சாரத்தில் திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நடிகர் பிரபாத் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கழக செயலாளர், கிளைக்கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், விருதுநகர் மாவட்டத்தின் ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், மாவட்ட கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.