தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் மக்களைத்தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்…

மதுரை:-

கழக ஆட்சியில் மக்களை தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன் தலைமையில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 237 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

பொதுமக்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ வீணாக அலைவதை தடுக்கும் பொருட்டு, அரசு அலுவலர்கள் பொதுமக்களை தேடி சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதே அம்மா திட்ட முகாமின் முக்கிய நோக்கம் ஆகும். அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு ஏழைகளுக்காகவும், மாணவர்களுக்காகவும் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மற்றும் உசிலம்பட்டி கோட்டத்துடன் கூடுதலாக மேலூர் என்ற புதிய கோட்டத்தினை உருவாக்கினார். அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய கோட்டத்தை உருவாக்க அரசாணை பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நான்காவதாக துவக்கப்படும் திருமங்கலம் வருவாய் கோட்டம் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப் படுகிறது. பொதுமக்கள் நீண்ட தூரம் பயணித்து உசிலம்பட்டி செல்வதற்கு பதிலாக தங்கள் கோட்ட அளவிலான கோரிக்கைகளை இனிமேல் திருமங்கலத்தில் புதிதாக அமையும் கோட்டத்தில் நிவாரணம் தேடிக்கொள்ள தமிழக அரசால் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரால் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திருமங்கலம் வருவாய் கோட்டத்தினுள் இணைகிறது. அதனையொட்டி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் சுமார் 4000 ஏக்கர் பரப்பளில் “தோப்பூர் – உச்சப்பட்டி துணைக்கோள் நகரம்” அமைய உள்ளது. அதனைத் தொடர்ந்து திருமங்கலம் வட்டம், கரடிக்கல் கிராமத்தில் சுமார் 55.30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த மத்திய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

முன்னதாக இம்முகாமில் திருமங்கலம் வட்டம் சார்பில் 19 முதியோர்களுக்கு ரூ.2,28,000 மதிப்பிலான முதியோர் உதவித்தொகைகளும், 2 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத்திட்ட கல்வி உதவித்தொகை ரூ.6000 மதிப்பிலும், 2 பயனாளிகளுக்கு ரூ.16000 மதிப்பிலான உழவர் பாதுகாப்புத்திட்ட திருமண உதவித்தொகையும், 12 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பிலான உழவர் பாதுகாப்புத்திட்ட இயற்கை மரண உதவித்தொகையும், கள்ளிக்குடி வட்டம் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1,32,000 மதிப்பிலான முதியோர் உதவித்தொகையும், 4 பயனாளிகளுக்கு உழவர் அட்டையும், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (முழுப்புலம்), 5 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வாகன விபத்து நிவாரணமும், பேரையூர் வட்டம் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.12,12,000 மதிப்பிலான முதியோர் உதவித்தொகையும், 10 பயனாளிகளுக்கு பிறப்பு / இறப்பு சான்றுகளும், திருப்பரங்குன்றம் வட்டம் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.6,84,000 மதிப்பிலான முதியோர் உதவித்தொகையும், 10 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களின் நியமன ஆணைகளும் என மொத்தம் 237 பயனாளிகளுக்கு ரூ.31,03,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.உதயகுமார் வழங்கினார்.