தேனி

கழக ஆட்சியை கவிழ்த்துவிட கனவு கண்டவர்கள் காணாமல் போய் விட்டார்கள் – தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு…

தேனி

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் எதிரிகள் நமது கழகத்தை வீழ்த்த முடியாததற்கான காரணம் அம்மாவின் அஞ்சாமையா அல்லது அம்மாவின் ஆளுமையா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நகர செயலாளர் என்.வி.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் வரவேற்றார். பட்டிமன்ற நடுவராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இருந்தார்.

பட்டிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவுக்கு பின் புரட்சித்தலைவி அம்மா கழகத்தின் பொதுச்செயலாளராகி 17 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நமது இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த அம்மா பெண்களின் நலனுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி, கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

மாணவ மாணவிகளுக்கு மடிகணினி உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கூற்றான ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என ஏழைகளை சிரிக்க வைத்தார். அவருடைய நல்லாட்சி தொடர வேண்டுமென்று 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற கழகத்தை 37 இடங்களில் மக்கள் வெற்றிபெற செய்தனர். 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியை தொடர்ந்து ஆள வைத்தனர்.

புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த காலகட்டத்திலும் மக்கள் கழகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா தனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

உண்மையான விசுவாசமிக்க தொண்டர்கள் கழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. புரட்சித்தலைவி அம்மா கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு பேசும்போது மகாபாரதத்தில் பரதனுக்கு பிறகு தற்போது தான் தனக்கு கிடைத்த பதவியை புன்னகையோடு திரும்ப கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இவரை தொண்டராக பெற்றது எனது பெரும் பாக்கியம் என்றார். ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்தது, நமக்கு நாமே என ஊர் ஊராக சுற்றியது, தற்போது புது சமுக்காளத்தை விரித்து கிராமசபை கூட்டம் நடத்துவது என நாடகம் நடத்தி வருகிறார். கமலஹாசன் கூட ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்தித்து செயல்பட மாட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

திமுக-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம், 2 ஜி ஊழல் என எதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் என்ன தான் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. தினகரனை கட்சியிலிருந்து அம்மா நீக்கினார். அதன்பின் தினகரன் 10 ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார். அம்மாவின் மறைவுக்கு பின் 40 நாட்களில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார். அதற்கு உறுதுணையாக 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இன்று அவர்களின் கதி நமக்கு எல்லோருக்கும் தெரியும். தினகரனின் கட்சி அழிந்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் அம்மா வழியில் நடைபெற்று வரும் கழக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் சுலபமாக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்கு போட்டவர்கள் எல்லாம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் ஆட்சியை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் வளர்ப்பு பாடமாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்கள் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கின்றன.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக கழகம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசினார்.

இப்பட்டிமன்றத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர துணை செயலாளர் அப்துல்சமது நன்றி கூறினார்.