தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியை குறை கூற முடியாததால் தனி நபர்களை விமர்சிக்கிறார் ஸ்டாலின் – நடிகர் சரத்குமார் பேச்சு…

மதுரை:-

கழக ஆட்சியை குறைகூற முடியாததால் தனிநபர்களை விமர்சிக்கிறார் ஸ்டாலின் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து நடிகர் சரத்குமார் முனிச்சாலை, வீரகாளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு நலம்பெற, தமிழ்நாடு வளம்பெற கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 2025-ம் ஆண்டு இளைஞர்கள் மிகுந்த நாடாக இந்தியா திகழும். அதில் இவரை போன்ற இளைஞர்கள் நாட்டை வழி நடத்துவார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். மக்களுக்காகவே நான் என்று உறுதியோடு பயணித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். நல்ல திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாது அதை நாட்டு மக்களுக்கு கிடைக்க செய்தார்.

இந்தியாவிலேயே மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த ஒரே தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தாய்மார்களுக்கு திருமண உதவி, மகப்பேறு உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்கள் விட்டு சென்ற இதுபோன்ற திட்டங்களை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். அவருக்கு சிறந்த ஆளுமை தன்மை உள்ளது. இன்றைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மாபெரும் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

பல்வேறு கருத்துகள், கொள்கைகள் கொண்ட கட்சிகள் எல்லாம் இன்றைக்கு ஒருங்கிணைந்துள்ளன. மத்தியில் ஒரு நிலையான, வலிமையான ஆட்சி நடைபெற வேண்டும் என்று ஒத்த கருத்துடன் அவர்கள் உள்ளனர். இதுவே முதல் வெற்றியாகும். கழகத்தின் மெகா கூட்டணியை கண்டு ஸ்டாலின் பயத்தில் உள்ளார். தி.மு.க. பிரச்சார கூட்டங்களில் ஸ்டாலின் ஆட்சியை பற்றி எந்த விமர்சனமும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் இங்கு விலைவாசி உயர்வு கிடையாது. தி.மு.க. ஆட்சியை போல் மின்வெட்டு கிடையாது. தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியும். அதனால்தான் ஆட்சியை பற்றி விமர்சிக்க முடியாமல் தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளார்.

தி.மு.க. சந்தர்ப்பாத கூட்டணி அமைத்துள்ளது. 1999 முதல் 2004 வரை தி.மு.க. ஆட்சியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார்கள். முரசொலிமாறன் மறைந்தவுடன் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டார்கள். அதன் பின் 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டு காலம் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. 2006-ம் ஆண்டு ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ.200 மில்லியன் டாலர் ஊழல் நடைபெற்றது. 2008-ல் 2 ஜி ஊழல் நடைபெற்றது. 2010-ல் காமன்வெல்த் ஊழல் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு நிலக்கரி ஊழல் நடைபெற்றது. இப்படி ஊழல் மிகுந்த ஆட்சியாக இருந்தது.

தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5 கோடி மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி கணக்கு போட்டு பார்த்தால் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருகிறது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், விவசாயத்துக்கு ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க 5 கோடி மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள். இதற்கு சிதம்பரம் ஜி.எஸ்.டி. வரி வசூல் மூலம்நாங்கள் கொடுப்போம் என்று கூறுகிறார். இதன் மூலம் பா.ஜ.க.வை அவர் பாராட்டி உள்ளனர்.

இவ்வாறு நடிகர் சரத்குமார் பேசினார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.