தற்போதைய செய்திகள்

கழக கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவு – தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவிப்பு…

சென்னை:-

கழகத்தின் மெகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், மத்தியில் ஒரு நிலையான ஆட்சி என்ற நோக்கத்தோடும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதென கட்சியில் முடிவெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலும், நிலையான பலமான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் கழக மெகா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சென்று கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம்.

இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார்.