மதுரை

கழக கூட்டணிக்கு சவுராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூடம் தீர்மான நகல் ஒப்படைப்பு…

மதுரை:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக போட்டியிடும் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தினந்தோறும் பல்வேறு அமைப்பினர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் சவுராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சவுராஷ்டிரா முன்னேற்ற கழகத்தின் சார்பில் சவுராஷ்டிரா கிளப்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் செய்திருந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.எஸ்.ராம்பாபு, சவுராஷ்டிரா முன்னேற்ற கழக பொறுப்பாளர் வி.ஜி.ராம்தாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

18-04-2019 அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாரதபிரதமராக மோடியை மீண்டும் பிரதமராக்கவும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மேலும் வலுப்பெறும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்களது சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவினை அளித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மான நகலை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் உடனிருந்தனர்.

தீர்மான நகலை பெற்றுக் கொண்ட அமைச்சர் சவுராஷ்டிரா நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதனால் தான் சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு நிதி உதவி வழங்கி அதை முதன்மையாக்கியுள்ளார், மேலும் இச்சமூகத்தை சார்ந்த எஸ்.எஸ்.சரவணனுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக புரட்சித்தலைவர் எஸ்.ஆர்.ராதாவுக்கு அமைச்சர் பதவி வழங்கினார். தொடர்ந்து உங்களின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு நிச்சயம் இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் சவுராஷ்டிரா பாசையில் பேசி அவர்களை கவர்ந்தார். அவர் பேசுகையில், நீங்கள் எப்போதும் இந்த இயக்கத்தின் மீது பற்றும் பாசமும் வைத்துள்ளீர்கள். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வீட்டு பிள்ளையாக இருக்கும் எனக்கு உங்கள் வாக்குகளை இரட்டை இலையில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன் என்று கூறினார்.