தற்போதைய செய்திகள்

கழக கூட்டணியின் வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்…

தருமபுரி:-

சூழ்ச்சிகளை முறியடித்து அமைக்கப்பட்ட மெகா கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி மற்றும் அரூரில் உயர்கல்வித் துறை அமைச்சரும், மாவட்டக் கழகச் செயலாளருமான கே.பி அன்பழகன் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றால் நாட்டை முன்னேற்ற பாதையில் தொலைநோக்கு பார்வையோடு கொண்டு செல்வார். அவர் இதுவரை பல எண்ணற்ற திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் செய்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான மெகா கூட்டணி அமைவதற்கு முன்பு எத்தனையோ விதமான சூழ்ச்சிகளை திராவிட முன்னேற்ற கழகம் செய்தது. ஏனென்றால் இந்த கூட்டணி அமைந்தால் திமுக அழிந்து போய்விடும். அதனால் பல சூழ்ச்சிகள் செய்து கூட்டணி ஏற்படாதவாறு முயற்சி செய்தார்கள். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த சூழ்ச்சியை முறியடித்து மெகா கூட்டணி அமைத்தார்கள்.

தற்போது அனைத்து ஊடகங்களும் கருத்துக்கணிப்பு என்று கருத்துத் திணிப்பை புகுத்தி வருகிறார்கள். அனைத்தும் திமுக கூட்டணியில் உள்ள சேனல்களே. ஆகவே பொய் பிரச்சாரம் வதந்திகளை நீங்கள் நம்பாதீர்கள். 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இந்த நல்லாட்சி தொடர்ந்து நடக்கும். ஆகவே நன்கு சிந்தியுங்கள். மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.

தருமபுரி விவசாயம் சார்ந்த பூமியாகும். வாஜ்பாய் தங்க நாற்கர சாலை கொண்டு வந்தது போல பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வந்தவுடன் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நாம் கேட்டு பெறுவோம். விவசாயத்திற்கு தான் நாம் முதல் இடம் கொடுக்கப் போகிறோம். நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் விவசாயத்தை பெருக்குவோம். ஆகவே தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்திலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில்‌ போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமாருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.