தற்போதைய செய்திகள்

கழக கூட்டணியை வெற்றி பெறச் செய்து சரித்திரம் படைப்போம் : முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சபதம்…

மதுரை:-

கழக கூட்டணியை நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து சரித்திரம் படைப்போம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

மதுரை மேற்கு தொகுதியில் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மேற்கு 1-ம் பகுதி அம்மா பேரவை செயலாளர் ஏ.வி.எஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது, ஒன்றரை கோடி தொண்டர்களையும், லட்சக்கணக்கான நிர்வாகிகளையும் கொண்ட, இந்திய துணை கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகும். நமது இயக்கத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் உழைப்பும், தியாகமும் உறுதுணையாக அமைந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆறு முறை முதல்வராகவும் பொறுப்பேற்று, இந்தியாவிலேயே அதிக முறை பதவியில் இருந்த பெருமையை பெற்றவர்கள். இத்தகைய பெருமையும், ஈடில்லா புகழும் படைத்த இயக்கம்தான் அ.இ.அ.தி.மு.கழகமாகும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. அரசியலில் இதற்கு முன்பு எந்த தலைவரும் சந்தித்திராத பல்வேறு நெருக்கடிகளில் இருந்தும் மோசமான சூழ்நிலைகளில் இருந்தும் புத்தெழுச்சியுடன் மீண்டு வந்த பெருமைக்கு உரியவரும் ஆவார். போராட்டங்களால் முடங்கி விடக்கூடாது, தொடர்ந்து முன்னேற வேண்டும், முயற்சிக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் செய்தியை ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் கல்வெட்டாய் பதித்திருக்கிறார். இந்த மண்ணில் கடைசி பெண் இருக்கும் வரை அம்மா இருந்து கொண்டேதான் இருப்பார். அவர் மண்ணுக்குள் மறையவில்லை. ஒவ்வொரு பெண்ணிடத்திலும் நிறைந்திருக்கிறார்.

அம்மா அவர்களின் அரசியல் வளர்ச்சி என்பது, அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவையை போன்றதாகும். ‘அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் தமிழகத்தை திறம்பட வழிநடத்திய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தெய்வத்தாயாக குடிகொண்டிருக்கிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில், யாரும் நிகழ்த்த முடியாத, எவரும் எண்ணிப் பார்த்திராத, சரித்திர சாதனையாக, கடந்த 32 ஆண்டுகளில் முறியடிக்கப்படாத சாதனைகளை முறியடித்து, ஆறாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, மாபெரும் வரலாற்று சாதனையை படைத்து, தமிழக அரசியல் வரலாற்றில் கழகத்தை, மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்று மிகப்பெரிய வரலாற்றை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களுக்கு உருவாக்கி கொடுத்துள்ளார். தமிழக மக்களின் எண்ணம் அறிந்து, அவர்களின் தேவை அறிந்து, வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்திட, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையை உருவாக்கிய பெருமை அம்மா அவர்களையே சாரும்.

அம்மாவின் வழியில் அமைந்துள்ள தற்போதைய அரசும் மக்கள் நலனை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் நமது அரசின் நிலைப்பாடு உறுதியானது. மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், விவசாயிகள் வறட்சி நிவாரணம், புதிய பயிர்க்கடன், மகப்பேறு நிதியுதவி உயர்வு போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன, இப்படிப்பட்ட மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி நடத்தி வரும் தமிழக மக்களின் இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், கழகம் தலைமையிலான வெற்றிக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய, கழக உடன்பிறப்புகள் அனைவரும், கழக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிக் கூறி, நாளை நமதே நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு அயராது உழைத்து வெற்றிச் சரித்திரம் படைத்திட உறுதியேற்போம்.

இவ்வாறு வைகைச்செல்வன் பேசினார்.