தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி ஜல்லிக்கட்டு காளை, தி.மு.க. கூட்டணி சவலை காளை : அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முழக்கம்…

விருதுநகர்:-

கழக கூட்டணி ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி குதித்து ஓடும், தி.மு.க. கூட்டணி சவலை காளை, அது குத்தி குத்தி பார்த்தாலும் எழுந்திருக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சி ஹவுசிங்போர்டில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துவள்ளிமச்சக்காளை தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலன் கருதி விலையில்லா மிக்சி, கிரைண்டா், ஃபேன் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒவ்வொரு வீட்டிலும் அம்மா அவர்கள் திட்டங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், தாலிக்கு தங்கம், படிக்கின்ற மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், சீருடை, பேருந்து பாஸ் உள்பட பல்வேறு சரித்திர திட்டங்களை அம்மா அவர்கள் கொண்டு வந்தார்.

பணக்கார வீட்டு பையன் மட்டுமே வைத்திருந்த லேப்டாப் இன்று சாதாரண வீட்டு பிள்ளைகளும் கையில் வைத்துக்கொண்டு உலக வரலாற்றை தெரிந்து வருகின்றனர். ஒரு பென்சில் கூட வாங்கிக்கொடுக்க முடியாத ஏழ்மையான நிலையில் கிராம மக்கள் இருந்தனர். இந்த நிலையை மாற்றி அமைத்தவர் அம்மா அவர்கள். தங்கம் வெட்டி எடுக்கின்ற பெல்சியம் நாட்டில் கூட ஒருகிராம் தங்கத்தை ஓசியாக கொடுக்க மாட்டார்கள். ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கி ஏழை வீட்டு பிள்ளைகளை கரைசேர்த்தவர் அம்மா அவர்கள்.

பிரசவ காலத்தில் தாய்க்கு ஊட்டச்சத்து கொடுக்கும் வகையில் ரூ.15 ஆயிரம் வழங்கியவர் அம்மா அவர்கள். இன்று ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சஞ்சீவி மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மா பரிசு பெட்டகம் வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தாய் மாமன் கொடுக்க வேண்டிய சீரை தாயாக இருந்து வழங்கினார். . முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். அம்மாவின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி கேப.பழனிசாமி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா என்ற ஆளுமைகள் ஒன்றரை கோடி மக்களின் மனதில் நின்றவர்கள். எம்ஜிஆர் இறந்து 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மா இல்லை என்பதால் கட்சி அழிந்து விடும், இரட்டை இலை சின்னம் கிடைக்காது. இனி அண்ணா திமுக அவ்வளவுதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மனப்பால் குடித்தார். ஆட்சியை பிடிக்க சைக்கிள் ஓட்டினார். சிவகாசிக்கு சைக்கிளில் வந்தவர்கள் டீ, வடை சாப்பிட்டு விட்டு காசு கூட கொடுக்காமல் சென்று விட்டனர். கழகத்தை யாரும் அழிக்க முடியாது. இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். இரட்டை குழல் துப்பாக்கி போன்று இருபெரும் தலைவர்கள் இன்று கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணி ஒவ்வாத கூட்டணி. அது நடக்காத பிள்ளை. கழக கூட்டணி ஜல்லிக்கட்டு காளை போன்று துள்ளிக்குதித்து ஓடி கொண்டிருக்கின்றது. திமுக கூட்டணி சவலை காளை போன்று படுத்து விட்டது. குத்தி குத்தி பார்க்கின்றனர் எழுந்திருக்க மாட்டேங்குது. கழக கூட்டணியை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார். அண்ணா திமுக இயக்கம் இல்லாத கிராமங்கள் கிடையாது. தற்போது நடைபெறும் நல்லாட்சியில் ஏராளமான பாலங்கள், புதிய பஸ் வழித்தடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. எம்பி நிதி எம்எல்ஏ நிதி உட்பட ஏராளமான நிதிகள் மூலம் சிவகாசி தொகுதியில் புதிய சாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம். பால்வளத்துறை, தொழில்துறை, கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் மாபெறும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதை கெடுக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.

தற்போது எங்களுடன் உள்ள பா.ஜ.க.வுடன் திமுக முன்பு கூட்டணி வைக்கவில்லையா. அவர்கள் அமைச்சரவையில் திமுக இடம்பெறவில்லையா? அன்று திமுகவிற்கு பா.ஜ.க. மதவாத கட்சியாக தெரியவில்லையா. இஸ்லாமிய சமுகத்தினரையும், கிறிஸ்தவ சமூகத்தினரையும் பாதுகாக்கின்ற மிகப்பெரிய இயக்கம் அண்ணா திமுக மட்டும்தான். மத்தியில் நிலையான ஆட்சி, நிம்மதியான ஆட்சி வர கழக கூட்டணி வெற்றி பெற வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். எங்களின் கூட்டணியில் மதவாதத்திற்கு இடமில்லை.

அம்மாவின் அரசு பொங்கலுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 வழங்கியது. இன்று பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.6000 போட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் தொடக்கி வைக்க உள்ளார். இப்படி திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பாதுகாவலனாக கழக அரசு இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் கழககூட்டணி அமோக வெற்றிபெறும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.