தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முழக்கம்…

திண்டுக்கல்:-

கழக கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கழக கூட்டணி வேட்பாளர் ஜோதி முத்து அறிமுக கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், கழக அமைப்பு செயலாளர் நத்தம் இரா.விஸ்வநாதன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

முன்னாள் அமைச்சர் இரா.விஸ்வநாதன் பேசியதாவது:-

தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அவர் மறைவிற்கு பின்னர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் திகழ்ந்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இவர்களின் நல்லாசியுடன் பாமக வேட்பாளர் ஜோதி முத்து போட்டியிடுகிறார். ஜோதி முத்து சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் திமுக வேட்பாளர் மிட்டா மிராசுதார்.

நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் இனி அடுத்து வரக்கூடிய ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தேர்தலிலும் கழகம் வெற்றி பெறும். இதற்கு அடித்தளமாக தற்பொழுது தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் மோடி உருவாக்கியுள்ளார். எனவே, மீண்டும் அவர் பிரதமராவதற்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு நத்தம் இரா.விஸ்வநாதன் பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பிரதமர் மோடி மீது ராகுல் குற்றம் சாட்டி பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் 2 மணிநேரம் விரிவான விளக்கம் அளித்தார். அதற்கு காங்கிரசால் பதிலளிக்க முடியவில்லை. ஐந்து வருடம் சிறப்பாக ஆட்சி புரிந்த பிரதமர் மோடி ரூ.2,500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கொண்டு வந்துள்ளார். வெளிநாடுகளில் உள்ளது போல் புல்லட் ரயில் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். லஞ்ச லாவண்யம் இல்லாத பிரதமராக, ஊழலற்ற, நல்ல பிரதமராக, மோடி திகழ்ந்து வருகிறார். எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் அவர்மீது இல்லை.

அம்மாவின் ஆட்சியில் 20 கிலோ விலையில்லா அரிசி, மிதிவண்டி என எண்ணற்ற திட்டங்கள் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற அற்புதமான திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா?
நடைபெற உள்ள தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி போன்ற பல்வேறு கட்சிகளுடன் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை கழகம் தனித்து நின்று ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. தற்போது கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வேட்பாளர் ஜோதி முத்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

கழக கூட்டணியின் வெற்றியை திமுக- காங்கிரஸ் கூட்டணியால் தடுக்க முடியாது. பாமக வேட்பாளர் சிறந்த பண்பாளர், நல்லவர் அவரை மருத்துவர் ராமதாஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். எனவே அவர் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவதற்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.